Ad Code

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?




மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் .



இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு!




``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வணிக ரீதியாக வளர்க்கப்படுகின்றன.


பொதுவாக, மாடித்தோட்டத்தில் அனைத்து ரகங்களையும் வளர்க்கலாம். ஆனால், முறையான பராமரிப்பு, பாசனம், கவாத்து அவசியம். மாடித்தோட்டத்தில் அனுபவம் இருப்பவர்கள், எந்த விதமான மா ரகங்களையும் தேர்ந்தெடுக்கலாம். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் குட்டை ரகங்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது நல்லது. அந்த வகையில், கேரள டார்ஃப், அம்ர பாலி போன்ற ரகங்களை வளர்க்கலாம். இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அர்கா உதயா, அர்கா சுப்ரபாதம் ரகங்களையும் மாடித்தோட்டங்களில் வளர்க்கலாம். ராயல் ஸ்பெஷல் (Royal special) என்ற ரகம் ஆந்திராவில் வளக்கப்படுகிறது. இந்த வகை மரத்தில் பூ, காய், பழம் என அனைத்தையும் ஒரே நேரத்தில் காண முடியும். வீட்டுத் தேவைக்கு உகந்த ரகமாக இது இருக்கும். இதையும் மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம்.



அறுவடைக் காலங்கள்!




ஒவ்வொரு ரகமும் ஒவ்வொரு பருவத்தில் வளரும். பொதுவாக, மா அறுவடை மார்ச் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் முடியும். தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய ரகத்தில் செந்தூரம் மாம்பழ வகை முதலில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்கள் மே, ஜூன் மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். கேரள டார்ஃப், அம்ர பாலி ஆகிய ரகங்கள் மே, ஜூன் மாதங்களில்தான் அறுவடைக்குத் தயாராகும். எங்கள் மையத்தில் உள்ள ரகங்கள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தயாராகும்.


மாடித்தோட்டத்தில் வளர்ப்பதற்கு நாட்டு ரகங்களுக்கும், ஹைபிரீட் ரகங்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இரண்டையும் வளர்க்கலாம். மாடித்தோட்டத்தைப் பொறுத்தவரை, மாஞ்செடியின் வேர் வளர்வதற்கான இடம் மிகவும் குறைவு. அதனால், அதிக கிளைகள் இல்லாமல் குறைந்த அளவு கிளைகளுடன் பராமரிப்பது சிறந்தது. செடி வளர்ப்பு பைகளில் (Grow Bag) வளர்ப்பதைவிட 50 - 70 கிலோ எடையுள்ள மரத்தைத் தாங்கும் திறனுள்ள சிமென்ட் தொட்டிகள் மற்றும் டிரம்களில் வளர்க்கலாம். தொட்டி, டிரம்களில் தண்ணீர் தேங்கக்கூடாது. அளவுக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் வேர்கள் அழுகிவிடும். தொட்டியில் தண்ணீர் வெளியேறுவதற்கான வசதிகளை அமைக்க வேண்டும்.


பராமரிப்பு முக்கியம்!



ஒவ்வோர் அறுவடைக்குப் பிறகும் கவாத்து கண்டிப்பாகச் செய்ய வேண்டும். தண்ணீர், நுண்ணூட்டச்சத்துகள் மிகவும் அவசியம். இவற்றை சீரான இடைவெளியில் கொடுக்க வேண்டும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை மாமரங்களுக்குத் தண்ணீர் குறைவாகவோ, விடாமலோ இருப்பது நல்லது. அந்தக் காலத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் அர்கா மேங்கோ ஸ்பெஷல் (Arka Mango Special) என்ற உயிர் நுண்ணூட்டச் சத்தைக் கரைத்துத் தெளித்து விட வேண்டும். பிறகு, பூப் பூக்கும் சமயத்தில் சாம்பல் நோய் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, மா பிஞ்சு விட்டவுடன் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் அர்கா மேங்கோ ஸ்பெஷல் பவுடரைக் கரைத்துத் தெளித்துவிட வேண்டும். இதனால் காய்ப்பிடிப்பு அதிகமாகும்.


மாங்கன்றுகளை மண்ணில் வைக்கும்போது வேர் நன்றாக விட்டு நீண்டு வளரும். மாடித்தோட்டத்தில் வேரின் வளர்ச்சி, கிளைகளின் வளர்ச்சி குறைவாக இருக்கும். அதனால், மாந்தோட்டத்தில் இருக்கும் மரங்களைப் போன்றே இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், நம் வீட்டுத் தேவைக்கும், நண்பர்களுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற அளவிலும் காய்க்கும். நம் மாம்பழ ஆசையைப் பூர்த்தி செய்யும்.

Post a Comment

0 Comments