மரங்கள்... நிழல் தரும், பூ தரும், காய் தரும், கனி தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்று சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழில் ஆதாரமாகவும் மரங்கள் திகழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்துதான் மரங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முதுமலைத் தேக்கு, டாப்ஸ்லிப் தேக்கு, தஞ்சாவூர் தேக்கு என நம் மண்ணில் செழிப்பாக விளைந்த பல வகையான தேக்கு மரங்கள் உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இன்றைய நிலைமை என்ன தெரியுமா?
கடந்த பத்து ஆண்டுகளாக, மர வேலைப் பாடுகளுக்கான மரங்கள், வெளிநாடு களிலிருந்துதான் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது உலகச் சந்தைகளில் நம்முடைய பாரம்பர்ய தேக்கு மரங்களைக் காண்ப தென்பது மிகவும் அரிதாகி வருகிறது. கானா தேக்கு, நைஜீரியா தேக்கு, கொலம்பியன் தேக்குகள்தான் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக மர வேலைப்பாடுகளுக்கான மரங்களின் விலை சகட்டுமேனிக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மரங்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில்தான் மர வேலைப்பாடு களுக்கான மரங்கள், காகிதக்கூழ் மரங்கள், ஒட்டுப்பலகை மரங்கள் (பிளைவுட்), தடிமரங்கள், உயிர் எரிசக்தி மரங்கள், அட்டைப் பெட்டிகள் தயாரிப்புக்கு தேவையான மரங்கள் ஆகியவற்றின் தேவைகளை நிறைவு செய்வதற்காகத்தான், இந்தியாவில் வேளாண் காடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்தும், எந்த மண்ணில், எந்த மரம் நடலாம், அதற்கான தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் ஆகியவை குறித்தும் நம் விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாகத்தான், பசுமை விகடனும் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இயங்கும் எங்கள் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் இணைந்து இந்த விழிப்புணர்வு தொடர் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
1950-ம் ஆண்டுக்குப் பிறகு நம் நாட்டில் மரங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்போது 30 கோடியாக இருந்த மக்கள் தொகை, இப்போது 140 கோடியை நெருங்கிவிட்டது. அதனால் பலவிதமான பயன்பாடுகளுக்காக மரங்களின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 1980-ம் ஆண்டுக்கு முன்பு நமக்குத் தேவைப்படும் மரங்கள் அனைத்தும் இயற்கைக் காடுகள் மூலம்தான் பெறப்பட்டன. 1980-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனச்சட்டம், 1988-ல் இயற்றப்பட்ட தேசிய வனக்கொள்கை, 1990-களுக்குப் பிறகு வந்த நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவை... மரங்களின் தேவைக்காக, காடுகளில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது, தேவைப்பட்டால் வனப்பகுதிக்கு வெளியே மரங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் எனத் திட்ட வட்டமாகத் தெரிவித்தன. நமக்குத் தேவையான மரவேலைப்பாடுகளுக்கான மரங்கள், தடிமரம், காகிதக்கூழ், ஒட்டுப் பலகை, எரிசக்திக்கான மரங்கள் ஆகியவற்றின் தேவைகளுக்காகவே வேளாண் காடுகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1988-ம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப் பட்ட இந்திய வனக்கொள்கை... இங்குள்ள தொழில்நிறுவனங்கள், தங்களுக்குத் தேவை யான மரங்களை, தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என உறுதியாகச் சொல்லி விட்டது. இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நம் மாநிலத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எந்தெந்தத் தொழில்நிறுவனங்களுக்கு எந்தெந்த மரங்கள் பயன்படுத்தலாம், அவற்றை எவ்வாறு சாகுபடி செய்யலாம் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டன.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரங்களைக் காடுகளிலிருந்து பெற முடியாத நிலையில், அவற்றை விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்ய, என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். வேளாண் காடுகள் திட்டத்துக்குத் தேவையான உயர் விளைச்சல் தரக்கூடிய மரங்கள், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங் களையும் உள்ளடக்கிய மதிப்புக்கூட்டு சங்கிலி என்ற சிறப்புத் திட்டத்தை 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினோம்.
இதைத் தொடர்ந்து... கடந்த 14 ஆண்டு களுக்கும் மேலாக... விவசாயப் பெருமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு மிகவும் தனித்துவம் வாய்ந்த மாநிலம். ஒருகாலத்தில் இங்கிருந்துதான் தடி மரங்கள் வெளிநாடு களுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப் பட்டன. ஆனால், தற்போது தேக்கு உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வெளிநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் ஒட்டுப் பலகை மரங்கள் (பிளைவுட்) தேவைப் படுகின்றன. இதனை விவசாயிகளிட மிருந்துதான் பெற முடியும். தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு 5 – 10 லட்சம் டன் மரங்கள் தேவைப்படுகின்றன. இங்கு அந்த மரங்கள் அதிக அளவு இல்லாத தால், அதுவும் வெளிநாடுகளிலிருந்துதான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. காகிதக்கூழ் மரங்கள் ஆண்டுக்கு 17.5 லட்சம் டன் தேவை. இதில் 1 லட்சம் டன் மரங்கள் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களி லிருந்து (பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்லாத இடங்களில் உற்பத்தி செய்யப்படும் மரங்கள்) பெறப்படுகின்றன. மீதமுள்ள 16.5 லட்சம் டன் மரங்களை விவசாய நிலங்கள் மூலமாகத்தான் உற்பத்தி செய்தாக வேண்டும்.
எரிசக்தி மரங்களின் தேவை ஆண்டுக்குச் சராசரியாக 25 லட்சம் டன்னிலிருந்து 100 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு 165 லட்சம் டன் மரங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் 10 சதவிகிதம் வனத்திலிருந்து பெற்றாலும், 90 சதவிகிதம் விவசாய நிலங்களிலிருந்து பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் விவசாயத்துக்கான 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு உள்ளது. ஆனால், இதில் 25 – 35 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வெறும் தரிசாகவே கிடக்கின்றன. இந்த நிலங்களை எல்லாம் சரியாகப் பயன் படுத்தினால் நமக்குத் தேவையான மரங்களை நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும். நம்முடைய விவசாயிகள்... நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட வழக்கமான பயிர்களை மட்டுமே சார்ந்து இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மரங்கள் வளர்ப்பதன் மூலம் கணிசமான வருமானம் உத்தர வாதமாகக் கிடைக்கும். வேளாண் காடுகள், பண்ணைக் காடுகள், தொழிற்சாலை சார்ந்த மரப்பயிர் சாகுபடி ஆகியவற்றை நடைமுறைப் படுத்தினால் விவசாயிகள் பொருளா தார ரீதியாக நல்ல வருவாய் பெற உதவுவதுடன், நாட்டின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் உறுதுணை யாக இருக்கும்.
நான் முதல்வராகப் பதவி வகித்து வரும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மானது... வனவியல் கல்வி, வனவியல் ஆராய்ச்சி, வன விரிவாக்கம், வனம் சார்ந்த தொழில் முனைவோர்களை உருவாக்குதல் ஆகிய நான்கு விதமான பணிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டுக்குத் தேவை யான 30 வகையான மரங்களைத் தேர்வு செய்து, அவற்றில் மேம்படுத்தப்பட்ட ரகங்களிலிருந்து உருவாக்கப் படும் விதைகள், கன்றுகள் ஆகியவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க் கிறோம். மண்ணுக்கேற்ற மர வகைகள், அதற்கேற்ற தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகளுக்கும் வழிகாட்டுகிறோம்.
முன்பு வேளாண் காடுகளில்... கதவு, ஜன்னல், கட்டில், மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரவேலைப்பாடுகளுக்கான மரங்கள் மட்டுமே பயிரிடப்பட்டன. தொழில்நிறுவனங்கள் சார்ந்த வேளாண் காடுகளைப் பற்றி அப்போது சிந்திக்கவில்லை. தற்போது பல வகைப் பயன்பாட்டுக்கும் தேவையான மரங்களை உள்ளடக்கிய வேளாண் காடுகளை உருவாக்கி வருகிறோம். மேலும், விவசாயிகள் வழக்கமாகச் சாகுபடி செய்யும் பயிர்களில் சிலவற்றையும் குறிப்பாகத் தோட்டக் கலைப் பயிர்கள், கால்நடைகள் ஆகியவற்றை இணைத்து நடைமுறைப் படுத்துகிறோம். விவசாய நிலங் களிலிருந்து பெறப்படும் மரங்களின் தரம் எப்படி இருக்கிறது, பசை, பிசின், ஃபைபர், மருத்துவக் குணங்கள் குறித்தும் ஆய்வு செய்கிறோம். மரம் எங்கு என்ன விலைக்கு விற்பனை செய்யலாம், விவசாயிகளுக்கு உள்ள பிரச்னை, அதற்கான தீர்வு ஆகியவற்றைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகிறோம்.
மண்ணுக்கேற்ற மரம், மண் மற்றும் மரத்துக்கேற்ற தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுவதோடு... தொழில் நிறுவனங்களை விவசாயிகளோடு இணைக்கும் பணியையும் செய்து வருகிறோம். இது தொடர்பாக விவசாயிகளுக்கு அவ்வப்போது பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100 ஹெக்டேர் பரப்பில் மாதிரி பண்ணைகளை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம்... வேளாண் காடுகள் வளர்ப்பின் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடு முழுவதும் ஆண்டுக்குச் சராசரியாக 5,000 விவசாயிகள் இங்கு வருகை புரிந்து பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், ஆய்வு மாணவர்கள், விஞ்ஞானிகள், வனத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட சுமார் 10,000 நபர்கள் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். 2004-2005-ம் ஆண்டு, காகிதத் தொழிற் சாலைகளுக்குத் தேவையான மரங்கள் உற்பத்திக்கென பிரத்யேகத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்மூலம் ஒப்பந்த முறை சாகுபடி அறிமுகப்படுத்தப்பட்டு, அது விவசாயிகளை வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளது.
அதேபோல 2013-ம் ஆண்டு ஒட்டுப் பலகைக்கும், 2016-ம் ஆண்டுப் பொறியியல் சார்ந்த தேவைகளுக்கும், 2020-ம் ஆண்டுத் தடிமரத்துக்கும் ஒப்பந்தமுறை சாகுபடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படியாகத் தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரங்களை, விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்துகொள் வதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக் கின்றன. குறுகிய காலகட்ட மரம் (2 - 5 ஆண்டுகளில் அறுவடை), நடுத்தரக் காலகட்ட மரம் (5 - 8 ஆண்டுகளில் அறுவடை), நீண்ட கால மரம் (8 - 20 ஆண்டுகளில் அறுவடை) எனச் சிறு விவசாயிகள் தொடங்கிப் பெரு விவசாயிகள் வரை... தங்களுடைய வசதிக் கேற்ற வகையில் மரங்களைச் சாகுபடி செய்யப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த வகையில் இத்திட்டங்கள் மூலம் இதுவரையிலும் 50,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
By
Smart Vivasayi
Comments
Post a Comment
Smart vivasayi