Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

நன்னீர் மீன் வளர்ப்பில் நீர் மற்றும் மண் மேலாண்மை

Water and soil management in freshwater aquaculture



மீன் வளர்ப்பில் , மீன் இருப்பு செய்யப் பட்டுள்ள குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கின்றன . நீர் மற்றும் மண் ஆகியவற்றில் ஏற்படும் இயற்வேதியல் மாற்றங்கள் பலவகை களில் மீன் வளர்ச்சியினைப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றன . மீன்களின் வளர்ச்சிக்கும் , பிழைப்புத் திறனுக்கும் , குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தரத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே , மீன் வளர்ப்புக் குளத்தில் நீர் மற்றும் மண்ணின் தரத்தை அறிவது மிக முக்கியமானதாகும் .


 குளத்து நீரின் தரம்:


 வெப்பநிலை :


மீன்கள் குளிர் இரத்த பிராணிகளாகும் . வெப்ப இரத்த பிராணிகளைப் போல் அல்லாமல் இவைகள் சூழ்நிலைக்கேற்ப தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ள முடியும் . மீன்களுக்கு 28 செ . முதல் 30 செ . வரை உள்ள வெப்பநிலையில் இருப்பது ஏற்றதாகும் . வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை மேற்கொள்ள கீழ்க்காணும் யுத்திகளைக் கையாளலாம் . 


1.தண்ணீரின் நிறத்தின் தரத்தைப் பராமரித்தல்
2. தண்ணீரின் ஆழத்தைக் கூட்டுவதற்கு நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துதல்.
3.காற்றுப் புகுத்திகளை பயன்படுத்துதல் 


தண்ணீரின் கார அமிலத் தன்மை PH:


 கார அமிலத் தன்மை என்பது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் அயனிகளின் அளவை குறிப்பதால் குளத்து நீரின் அமிலத் தன்மையையோ அல்லது காரத்தன்மையையோ தெரிந்து கொள்ளப் பயன்படுகிறது . மீன்களின் வளர்ச்சிக்கும் , உற்பத்திக்கும் ஏற்ற கார அமில அளவு ( 6 முதல் 8.5 வரை ) ஏற்படுத்தப்பட வேண்டும் . மேலும் , குறைந்த கார அமிலத் தன்மையில் கரியமில வாயு மேலோங்கிய கார்பனாக இருப்பதால் கார்பனேட்டுகள் 
மற்றும் பைகார்பனேட்டுகளின் அளவு கூடும் . ஒளிச் சேர்க்கையின் போது அதிகளவு கரியமிலவாயு பயன்படுத்துவதால் மதிய வேளையில் கார அமிலத்தன்மை குறைகிறது . எனவே , கார அமிலத்தன்மை இதற்கேற்றவாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் . கார அமிலத் தன்மையில் ஏற்படும் திடீர் மாற்றம் மீன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கும் . நாளொன்றுக்கு 0.4 என்ற வித்தியாசத்தில் கார அமிலத்தன்மை மாறலாம் .


 உயிர்வளி ( Oxygen ):


 வளர்ச்சியை அதிகம் பாதிக்கும் காரணிகளுள் மிக முக்கியமானது பிராணவாயு அல்லது உயிர்வளி ஆகும் . அநேக ஊட்டப் பொருட்களின் அளவு மற்றும் கரைதிறனை உயிர்வளி நேரடியாக பாதிக்கிறது . குறைந்த பிராணவாயு மீன்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் . எனவே , உயிர்வளி அளவு எப்போதும் 3.5 பி.பி.எம் . என்ற அளவுக்கு மேல் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் . பிராணவாயு உற்பத்திக்கு சேர்க்கை அதிக பங்களிக்கிறது . அதிக ஜீவன்கள் பிராணவாயுவை சுவாசத்திற்குப் பயன்படுத்துகின்றன . பிராணவாயு மதிய நேரங்களில் அதிகரித்தும் , இரவு நேரங்களில் குறைந்தும் , இரட்டை நிலையில் காணப் படுகிறது . நுண்ணுயிர் மிதவைத் தாவரங்கள் குறைந்து காணப்படுவது , உண்ணப்படாத உணவு மற்றும் பிற கழிவுகள் அடி மண்ணில் அதிகரிப்பது போன்றவை மறைமுகமாக உயிர்வளி தேவையை கூட்டுகிறது . இதனால் , குளத்து நீரின் அடிப்பகுதியில் பிராணவாயு தேவை அதிகரித்து , ஊடுருவும் ஒளியின் அளவும் ஒளிச்குறைந்து , கீழ்மட்ட நிலையில் கரைந்துள்ள உயிர்வளியின் அளவு குறைக்கப்படுவதற்கு ஏதுவாகிறது . பாசி மற்றும் நுண்ணுயிர் மிதவைகள் அதிக அளவில் மடியும்போதும் உயிர்வளி உற்பத்தி குறைகிறது . உயிர்வளி குறைவு ஏற்படும் போது பொதுவாக மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்தில் வருவதை கவனிக்கலாம் . இக்குறையினை நீக்கிட இறந்த நுண்ணுயிர் மிதவைகளை நீருடன் அகற்றி புதிய நீரினைச் சேர்த்தல் வேண்டும் .


 நீர் கலங்கள்:


 நீர் நிலையில் ஒளி ஊடுருவலைத் தடுக்கும் பொருட்களின் அளவே நீர் கலங்களைக் குறிக்கிறது . வளர்ப்பு குளங்களில் நுண்ணுயிர்களின் காரணமாகவோ , மிதக்கும் மண் துகள்களின் காரணமாகவோ , நீர் கலங்கல் ஏற்படலாம் . நீர் கலங்கல் ஊடுருவும் ஒளியைக் குறைப்பதன் மூலம் ஒளிச்சேர்க்கையின் அளவைத் தடுக்கிறது . கலங்கல் அதிகமாகும் போது உயிர்வளி அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது . நுண்ணுயிர்கள் மிதமான அளவில் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும் , களிமண் துகள்கள் காணப்படுவது நல்லதல்ல . ஏனென்றால் , இது மீன்களின் செவுளை அடைத்து சுவாசத்துக்கு பங்கம் விளைவிக்கலாம் . மண் அரிப்பு ஏற்படுவதால் அதிக களிமண் துகள்கள் நீரில் காணப் படுவதற்கு பிரதான காரணமாகிறது . ஆலமும் ( Alum ) , ஜிப்சமும் ( Gypsum ) இந்த களிமண் துகள்களை நீக்குவதற்கு சிறந்த இடுபொருட்கள் ஆகும் . ஆலமும் , ஜிப்சமும் இடும்போது , அது அமிலத் தன்மையை ஏற்படுத்துமாதலால் , சுண்ணாம்போடு சேர்த்து பயன்படுத்துவது நன்மை பயக்கும் . மீன் வளர்ப்பு குளங்களில் 25 - 40 செ.மீ. செச்சி தட்டு என்ற அளவில் நீர்கலங்கல் இருப்பது நல்லது . அதிக செச்சி தட்டு அளவுகள் குறைவான உற்பத்திக்கு வழிவகுக்கும் . ஆகவே , குளத்தில் உரமிடுதல் வேண்டும் . அதே நேரம் , மிகக் குறைவான செச்சி தட்டு அளவுகள் அதிக உயிர் பொருட்களைக் கொண்டிருந்து உயிர்வளி குறைவுக்கு வழிவகுக்கும் . ஆகவே , குளத்து நீர் மாற்றம் செய்ய வேண்டும் .


 நீரின் நிறம்:


 குளத்து நீரின் நிறம் அதில் அடங்கியுள்ள நுண்ணுயிர்கள் , கரைந்த தாதுக்கள் , களிமண் துகள்கள் , அங்ககப் பொருட்கள் மற்றும் நிறமிகள் போன்றவைகளின் மீது சூரிய ஒளி படுவதினால் காணப்படுகிறது . ஆய்வகக் கருவிகள் இல்லாத பட்சத்தில் நீரின் நிறத்தை வைத்து , அதன் தரத் தன்மையை மதிப்பீடு செய்யலாம் . இளம் பழுப்பு மற்றும் மஞ்சள் பழுப்பு நிறம் , இளம் பச்சை , அடர் பச்சை மற்றும் இருண்ட பச்சை , அடர் பழுப்பு இளம் மஞ்சள் புகைத் தன்மையுடைய வெள்ளை கலங்கிய நீர் மற்றும் தெளிவான நீர் ஆகிய பல நிறங்களில் நீர் காணப்படலாம் . இவற்றுள் , இளம் பழுப்பு , மஞ்சள் பழுப்பு நிறமுள்ள நீரில் மீன்கள் நன்கு வளரும் . அதே நேரம் இளம் பச்சை நிறமுள்ள நீரை எளிதாக பராமரிப்பு செய்யலாம் . மேலே குறிப்பிடப்பட்டுள்ள , மற்ற நிறமுள்ள குளத்து நீர் மீன் வளர்ப்புக்கு சிறந்ததாக அமையாது . 


குளத்து மண்ணின் தரம்:


 மண்ணின் கார அமிலத்தன்மை ( pH ) :


மண்ணில் கார அமில அளவு 6-8.5 ஆக இருத்தல் வேண்டும் . இந்த அளவு குறையும் போது மண்ணின் தேவைக்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும் . மண்ணின் கார அமில அளவு 6-7 ஆக இருந்தால் 0.3-0.5 டன் / எக்டர் என்ற அளவில் சுண்ணாம்பு இட வேண்டும் .


 குளத்தின் அடிமண்:


 குளத்தின் அடிமட்டத்தில் பயன்படாத உணவுகள் , உயிரிகளின் கழிவுகள் ஆகியவை படிந்து காணப்படும் . குளத்தின் அடியில் தரமான மண் இருந்தால் தாதுப் பொருட்களின் ( Mineralisation ) இயக்கத்தால் சத்துப் பொருட்கள் தொடர்ந்து மண்ணிலிருந்து வெளிப்படும் . இச்செயலுக்கு உயிர்வளி தேவைப்படுகிறது . குளத்தில் அனங்ககப் பொருட்களின் அளவு அதிகரித்தால் மண்ணில் உயிர்வளி அளவு குறைந்து ஹைட்ரஜன் சல்பைடு , அம்மோனியா , மீத்தேன் ஆகிய வாயுக்கள் உருவாகின்றன . களிமண் கலந்த மணலினை அடிமட்டமாகக் கொண்ட குளத்தில் , மீன் வளர்ப்பு ஒரே சீராக இருக்கும் . ஒரு நல்ல மீன் வளர்ப்பிற்கு குளத்தின் மண் , சத்துப்பொருட்கள் நிறைந்ததாகவும் , தாதுப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடியதாகவும் , உணவு சங்கிலியை ( Food Chain ) தொடர்ந்து நிகழ்விப்பதாகவும் இருக்க வேண்டும் . 


மீன் வளர்ச்சிக்கு குளத்தின் மண் மற்றும் நீரின் முக்கியத்துவத்தினை உணர்ந்து உரமிடுதல் , செயற்கை உணவிடுதல் , நீர் மாற்றம் ஆகிய மேலாண்மை நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . எனவே , மீன் வளர்ப்பு குளங்களின் நீர் மற்றும் மண் வளத்தினை நன்கு ஆராய்ந்து அவைகளை சீரான மீன் வளர்ச்சிக்கு உகந்தவையாக மாற்றினால் மீன் உற்பத்தியினை அதிகப்படுத்தலாம் .


Post a Comment

0 Comments

Ad Code