Methods of feeding goats in different seasons
ஆடு வளர்ப்பு தொழில் நிலமற்றவர்களில் தொடங்கி பெரிய பண்ணையாளர்கள் வரை மேற்கொள்ளக் கூடிய ஓர் எளிய தொழிலாகும் . ஆடு வளர்ப்பில் இலாபம் அதிகரிக்க தீவன மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது . உற்பத்தி செலவில் 65 - 70 சதவீதம் தீவனத்திற்காக மட்டும் செலவிட நேரிடுகிறது . ஆகையால் , தீவனத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் . ஆடுகளின் வயது , உற்பத்தித் திறன் , அதன் பல்வேறு பருவங்களின் வளர்ச்சி வீதம் போன்றவைகளை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்துகளின் தேவைக்கேற்ப தீவனத்தில் மாற்றம் செய்து சரிவிகித தீவனம் அளிக்கும் பொழுது உற்பத்தி செலவு குறைந்து ஆடு வளர்பினால் இலாபம் அடையலாம் .
ஆடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்:
ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு எரிசக்தி , புரதச்சத்து , நார்ச்சத்து , கொழுப்புச்சத்து , உயிர்ச்சத்து ,
தாது உப்புக்கள் மற்றும் தண்ணீர் மிக முக்கியமானவையாகும் . ஆடுகளின் வளர்ப்பு முறைக்கேற்ப அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வேறுபடுகிறது . உதாரணமாக , மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தேவையான அளவிற்கு புரதச் சத்துக்கள் , தாது உப்புக்கள் மற்றும் உயிர்ச் சத்துக்கள் கிடைப்பதில்லை . ஆகையால் , வளர்ச்சி மற்றும் உற்பத்தி குறைகிறது . கொட்டில் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு பசுந்தீவனங்கள் , உலர் தீவனங்கள் , மர இலைகள் மற்றும் அடர் தீவனம் 150 முதல் 200 கிராம் அளவில் கொடுக்கும் பொழுது வளர்ச்சி மற்றும் உற்பத்தி அதிகரிக்கிறது . பொதுவாக , ஆடுகள் அதன் உடல் எடையில் 3 - 5 சதவிகிதம் வரை உலர் பொருளைக் கொண்ட தீவன அளவினை உட்கொள்ளக்கூடியவை . ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் திறன் அதன் வயது மற்றும் பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது . அதற்கேற்றவாறு தீவனத்தின் அளவும் , ஊட்டச்சத்துக்களின் தேவையும் வேறுபடுகிறது . ஆகையால் , ஆடுகளின் பருவத்திற்கு ஏற்றவாறு தீவனத்தின் அளவிலும் ஊட்டச்சத்திலும் மாற்றம் செய்து அளிக்கும் பொழுது , உற்பத்தித் திறன் மேம்படுவதோடு தீவனச் செலவினையும் குறைத்து பண்ணையை இலாபகரமாக நடத்தலாம் .
ஆடுகளின் பல்வேறு பருவங்கள் என்பது
1. பிறந்த குட்டிகள் தாயுடன் உள்ள குட்டிகள்.
2. தாய் இல்லா குட்டிகள்
3.வளரும் பருவக் குட்டிகள்
4. பருவமடைந்த பெட்டை ஆடுகள்
5. சினை ஆடுகள்
6.தாய் ஆடுகள்
7. பால் வற்றிய ஆடுகள்
8. இனப்பெருக்கத்திற்கான கிடாக்கள்
9. இறைச்சிக்கான கிடாக்குட்டிகள்
ஆடுகளுக்கு பசுந்தீவனம் , உலர் தீவனத்திலிருந்து உடல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்த போதிலும் , சிறந்த உற்பத்திக்கு தேவையான கூடுதல் சத்துக்களைப் பெற அடர் தீவனத்தையும் அளிக்க வேண்டும் .
அடர் ஆடுகளுக்கான தீவனம் தயாரிக்கும் பொழுது முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டியது அதன் வயது , பருவம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் . மேலும் , 14 -18 சதவீதம் புரதமும் , 65 - 75 சதவீதம் மொத்த செரிமான சத்துக்களும் கொண்டவாறு அருகாமையில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு குறைந்த செலவில் தயாரித்தல் வேண்டும் .
அடர் தீவனத்திற்கான மூலப்பொருட்கள் :
எரி சக்தி மிக்கவை :
மக்காச்சோளம் , வெள்ளைச் சோளம் , அரிசிக்குருனை , மரவள்ளிக் கிழங்கு மாவு , சர்க்கரை ஆலைக் கழிவு
புரதச் சத்து மிக்கவை மிக்கவை :
கடலைப் பிண்ணாக்கு , எள் பிண்ணாக்கு , சோயா பிண்ணாக்கு , தேங்காய் பிண்ணாக்கு , பருத்திக்கொட்டை பிண்ணாக்கு
எரி சக்தி மற்றும் குறைந்த புரதச்சத்து உள்ள வேளாண் உபபொருட்கள் :
அரிசி , கோதுமை தவுடு , உளுந்து நொய் , பாசிப்பயறு நொய் , துவரம் பொட்டு தூசு , கருவேல மரக்காய்கள் , மரவள்ளிக்கிழங்கு திப்பி, தாது உப்புக்கலவை, சமையல் உப்பு.
அடர்தீவனத்தில் இருக்க வேண்டிய சத்துக்கள்
ஆரம்பகால குட்டித் தீவனம் :
புரதம் 18 சதவீதம் , எரிசக்தி - 75 சதவீதம்.
வளரும் பருவ ஆடுகள் :
புரதம் - 16 சதவீதம் , எரிசக்தி - 70.
சதவீதம் வளர்ந்த ஆடுகளுக்கான தீவனம்:
புரதம் - 14 சதவீதம் , எரிசக்தி 65 சதவீதம்.
பிறந்த குட்டிகளுக்கான தீவன மேலாண்மை :
* சீம்பால் முதல் மூன்று நாட்களுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் . சீம்பால் ஒரு நாளைக்கு 100 மில்லி ஒரு கிலோ எடைக்கு என்ற அளவில் கொடுக்க வேண்டும் .
* ஒரு நாளைக்கு 0.7 - 0.9 லி . தாய்ப்பால் ( அ ) புட்டிப்பால் முதல் இரு வாரத்திற்கு 3 - 5 முறை கொடுக்க வேண்டும் . 3 வாரத்திற்கு மேல் பால் மறக்கடிக்கப்படும் காலம் ( 3 மாதம் ) வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் மட்டும் பால் அருந்த அனுமதிக்க வேண்டும் .
* மூன்று குட்டிகள் இருப்பின் இரண்டு குட்டிகள் பாலருந்திய பின் மூன்றாவது குட்டியை பாலருந்த விட வேண்டும் .
* தேவை ஏற்படின் பாலை கறந்து புட்டி மூலமகவோ பாத்திரத்திலோ பாலருந்த பழக்கி விடலாம் .
3 - 4 வாரங்களில் ஆரம்ப கால குட்டி தீவனத்தை கொடுத்து பழக்க வேண்டும் . அளவை சிறிது சிறிதாக அதிகரிக்க வேண்டும் .
* செரிமானமின்மை , வயிற்றுப்போக்கு ஏற்படாதவாறு கவனம் கொள்ள வேண்டும் .
* இளம் புல் , தளிர் இலைகளை 3 - 4 வார வயதில் அளிக்கத் தொடங்கலாம் .
* உண்ண பழகியவுடன் அளவை சிறிது சிறிதாக அதிகரிக்கலாம் .
* மூன்று மாத வயதில் பால் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் .
வளரும் பருவக் குட்டிகளுக்கான தீவன மேலாண்மை:
* 3 முதல் 4 மாத வயது வரை வேலிமசால் , கினியாபுல் , கோ -4 , அகத்தி போன்ற பசுந்தீவனங்களை நாளொன்றிற்கு ஒரு கிலோ வீதம் கொடுக்கலாம் . பின்னர் அளவினை அதிகரித்து 6 மாத வயது வரை 2 கிலோ வீதம் அளிக்கலாம் . 6 - 9 மாதம் வரை 3 கிலோ வீதம் அளிக்கலாம் .
* அடர் தீவனம் நாளொன்றிற்கு 3 - 4 மாதம் வரை 50 கிராம் , 5 - 6 மாதத்தில் - 100 கிராம் , 7-9 மாதத்தில் 200 கிராம் வீதம் அளிக்கலாம் .
பருவமடைந்த பெட்டை ஆடுகளுக்கான தீவன மேலாண்மை:
பத்து மாதம் முதல் ஒரு வருட வயதில் பெட்டை ஆடுகள் பருவமடைகின்றன . இப்பருவத்தில் இனவிருத்திக்கென தேர்வு செய்து பெட்டைகளை பிரித்து தீவனம் அளிக்க வேண்டும் . பருவ காலம் தொடங்குவதற்கு முன் கூடுதலான ஊட்டச்சத்து தீவனங்களை கொடுப்பதால் பருவ அறிகுறிகள் , கருத்தறிக்கும் தன்மை போன்றவை சிறப்பாக வெளிப்பட்டு இரட்டை குட்டிகள் போடும் சதவீதமும் அதிகரிக்கிறது . இதனை செழுமைப் படுத்துதல் எனக் கூறப்படுகிறது .
நாளொன்றிற்கு பசுந்தீவனம் 3 - 4 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 250 கிராம் என்ற அளவில் அளித்து செழுமைப்படுத்த வேண்டும் .
சினை ஆடுகளுக்கான தீவன மேலாண்மை:
சினை உறுதி செய்யப்பட்ட ஆடுகளை தனியாக பிரித்து வைத்து தீவனம் அளிக்க வேண்டும் .
முதல் 3 மாதங்களை விட கடைசி 2 மாதங்களில் கருவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் . ஆகையால் , இக்காலங்களில் வழக்கமான அளவைக் காட்டிலும் 1 - 2 மடங்கு அதிக தீவனம் அளிக்க வேண்டும் . அவ்வாறு கூடுதல் சத்துக்களினால் குட்டிகளில் சிறந்த பிறப்பு எடை , குட்டிகளில் குறைந்த இறப்பு விகிதம் , தாய் ஆடுகளில் சிறந்த பால் சுரப்பு அதன் மூலம் குட்டிகளின் வளர்ச்சி வேகம் அதிகரித்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன .
முதல் 3 மாதங்களுக்கு பெட்டை ஆடுகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைஅளிக்கலாம் . அதாவது அதாவது பசுந்தீவனம் 3 - 4 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 250 கிராம் . சினையின் 4 மற்றும் 5 - ம் மாதங்களில் அளவினை அதிகரித்து பசுந்தீவனம் 5 - 6 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 350 - 400 கிராம் அளிக்கலாம் . இதனை 2 - 3 வேளைகளில் பிரித்து அளிக்க வேண்டும் .
சுத்தமான குடிநீர் மற்றும் தாது உப்புக்கள் எப்போதும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் .
குட்டி ஈனும் தருவாயில் அல்லது குட்டி ஈன்ற பின் தானியங்களின் அளவை குறைத்து கொண்டு உலர் தீவனத்தை தேவையான அளவு கொடுக்கலாம் .
தாய் ஆடுகளுக்கான தீவன மேலாண்மை ;
குட்டி ஈன்ற உடன் நல்ல சுத்தமான சுட வைத்து ஆர வைத்த வெதுவெதுப்பான குடி தண்ணீர் அளிக்க வேண்டும் .
குட்டி ஈன்ற பின் மெதுவாக தீவன அளவைக்கூட்ட வேண்டும் , ஒரு நாளைக்கு தேவையான தீவனத்தை 6 - 7 தடவையாக பிரித்துக் கொடுக்க வேண்டும் .
எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் , நார்ச் சத்து மிகுந்த தீவனத்தையும் அளிக்க வேண்டும் .
பால் உற்பத்திக்கு கூடுதல் சத்துக்கள் தேவைபடுவதால் பால் கொடுக்கும் 3 மாதங்களுக்கு தீவன அளவினை அதிகரித்து நாளொன்றிற்கு பசுந்தீவனம் 5 - 6 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 400 - 500 கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும் .
பால் வற்றிய ஆடுகளுக்கான தீவன மேலாண்மை :
வெற்று ஆடுகளை தனியாக பிரித்து வைத்து தீவனம் அளிக்க வேண்டும் . இக்காலகட்டத்தில் சத்து குறைவான தீவனங்களை அளித்து தீவனச் செலவினைக் குறைக்கலாம் . மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு கூடுதல் தீவனம் தேவைப்படாது .
ஆனால் , வெற்று ஆடுகள் சினையாவதற்கு முன்னர் , முந்தின சினைக்காலம் மற்றும் பால் உற்பத்திக் காலத்தில் ஏற்பட்ட அழுத்தங்களிலிருந்து விடுப்பட்டு உடல் தேறுவதற்கு ஏதுவாக தீவன அளவில் மாற்றம் செய்து செழுமைப்படுத்த வேண்டும் . இதனால் சினை ஏற்படும் திறன் அதிகரிப்பதுடன் இரட்டைக் குட்டி , மூன்று குட்டிகள் ஈனுவதற்கு வேண்டிய கருமுட்டைகள் உற்பத்தியாகி அதிக அளவில் குட்டி ஈனும் திறன் ஆடுகளில் உண்டாகிறது .
இனப்பெருக்கத்திற்கான கிடாக்களுக்கான தீவன மேலாண்மை:
கிடாக்கள் இனவிருத்திக்கேற்ற உடல் அமைப்புடன் பராமரிக்கத் தேவையான அளவுகளில் சத்துமிக்கத் தீவனங்களை அளிக்கவேண்டும் .
உடல் பருத்து அதிக கொழுப்பு சேர்ந்திருந்தால் கிடாக்களுக்கு இனச்சேர்க்கையில் நாட்டம் இருக்காது . அதேசமயம் உடல் மெலிந்து காணப்பட்டாலும் இனச்சேர்க்கைக்கு கூடுதலாக பயன்படுத்த இயலாது .
Give ur committed assurance to add me in all ur new posts, groups, links, super tips
ReplyDelete