Increase yields and increase profits ... Shall we know about black urea?
விவசாயம் பற்றிய தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள டெலிக்ராம் இணையவும் - https://t.me/smart_vivasayi
பிரேசில் நாட்டில் கரும்புச் சாகுபடியில்
யூரியாவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் `கறுப்பு யூரியா' பற்றித் தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையத்தின் செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மைய முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் அரு.சோலையப்பன் சொல்வதைக் கேளுங்கள்...
``பிரேசில் நாட்டில் கரும்புச் சாகுபடியில் ஒரு ஹெக்டேரில் 3 பங்கு அதிகமாக மகசூல் எடுத்துள்ளார்கள். சாதாரணமாக 60 டன் கிடைத்து வந்த நிலங்களில் 180 டன் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் `அசிட்டோபாக்டர்’ (Acetobacter) என்ற நுண்ணுயிரியிலிருந்து கிடைக்கும் உயிர் உரம்தான் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது. அப்போதைய தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையத்தின் ஆணையர், இந்தச் செய்தியை எங்களுக்கு அனுப்பி வைத்து, `இதுபோல் நம்மாலும் ஏன் செய்ய முடியாது’ என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அசிட்டோ பாக்டர்
ஊட்டி, ஏற்காடு போன்ற குளிர்ப்பிரதேசங்களில்தான் இந்த நுண்ணுயிரி வளரும் என்று கேள்விப்பட்டு அங்கெல்லாம் சென்று ஆய்வு செய்தோம். அது கிடைக்கவில்லை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த `அசோஸ் ஸ்பைரில்லம்’ என்ற நுண்ணுயிர் வகை கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில், மதுராந்தகம் சர்க்கரை ஆலையிலும், திருவெண்ணெய்நல்லூர், செங்கல்வராயன் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையிலும் கோ.க-671 என்ற ரகக் கரும்பிலிருந்து சாறு எடுத்துக்கொண்டு இருந்தார்கள். 2000-மாவது ஆண்டில் எதேச்சையாக இந்தச் சாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது, இதில் `அசிட்டோபாக்டர்’ இருந்தது கண்டறியப்பட்டது.
வழக்கமாக உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள், பயிர்களின் வேர்களில்தான் வாழும். ஆனால், கறுப்பு யூரியா எனப்படும் அசிட்டோ பாக்டர் மட்டும் கரும்புக்கு உள்ளே சர்க்கரை சத்திலும், அமிலத் தன்மையிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. கரும்புக்குள்ளே இருந்துகொண்டு காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்துப் பயிருக்குக் கொடுக்கும்.
ஆய்வுக்கூடத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் வயல்வெளிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்தோம். அதன்படி சாத்தனஞ்சேரி - தனபால், காவிதண்டலம் - கமலசேகரன், செங்கல்பட்டு - முகுந்தன் ஆகியோரும் உளுந்தூர்பேட்டை- சாரதா ஆசிரமமும் நாங்கள் கூறியபடி கரும்பு பயிரிட முன்வந்தார்கள். கரும்பு பயிரிட்ட வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ கறுப்பு யூரியா கொடுத்தோம். ரசாயன யூரியாவை முற்றிலும் நிறுத்தினோம். இருந்தும் மகசூல் 20% அளவுக்கு அதிகரித்தது. சோதனை வெற்றி பெற்றதால் தமிழகம் முழுக்க `கறுப்பு யூரியா’ பரவியது. இதன் பிறகும் வயல்வெளிச் சோதனைகள் தொடர்ந்தன. இதன் மூலம் இந்தியாவெங்கும் இதன் பயன்பாடு உணரப்பட்டது.
டாக்டர் டெபனர்
இதைக் கேள்விப்பட்டுப் பிரேசில் நாட்டிலிருந்து டாக்டர் டெபனர் என்ற பெண்மணி இங்கே வந்தார். இவர்தான், இந்த நுண்ணுயிரியை முதன்முதலில் கண்டறிந்தவர். கரும்பு சாகுபடியில் நாம் எடுக்கும் மகசூல், இயற்கை உரப் பயன்பாடு ஆகியவற்றைப் பாராட்டிவிட்டுச் சென்றார். இந்தச் செய்தியை அறிந்த தென்கொரியா அரசு, `கறுப்பு யூரியா’ தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும்படி கேட்டுக்கொண்டது. அதன்படி எங்கள் உயிரியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.முத்துக்குமாரசாமி, ஓர் ஆண்டுக் காலம் அங்கு தங்கியிருந்து தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தார்.
ரசாயன உரச்செலவு மிச்சமாகும்
கறுப்பு யூரியாவைக் கரும்புக்கு மட்டுமல்லாமல், நெல், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மலர்கள், சிறுதானியங்கள் என அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால், யூரியா போட வேண்டிய அவசியம் இருக்காது. ரசாயன உரச்செலவு மிச்சமாகும். கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தும்போது, அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 6 கிலோ கறுப்பு யூரியாவை மூன்று முறை, தலா 2 கிலோ என்ற விகிதத்தில் பிரித்து பயன்படுத்தலாம். நெற்பயிரில் தொண்டைக் கதிர் வரத்தொடங்கிவிட்டால், கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தக் கூடாது. காரணம், தழைச்சத்து அதிகரித்தால் மகசூல் பாதிக்கப்படும்.
இந்தக் கறுப்பு யூரியா தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் உள்ள உயிரியல் ஆய்வு மையத்திலும், சில தனியார் இயற்கை உர விற்பனையகங்களிலும் கறுப்பு யூரியா விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோ ரூ.60-தான்’’
0 Comments
Smart vivasayi