துலக்கமல்லி (செண்டுமல்லி) பயிரிடும் முறை மற்றும் பயன்கள் - Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli)
Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli)
செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும்.
சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது.
துலக்கமல்லி எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
துலக்கமல்லியை அக்டோபர் – ஜனவரி மாதங்கள் வரை பயிர் செய்யலாம்.
மண்
மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 1.5 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைநேர்த்தி
விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின் போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கி விடவேண்டும். விதைநேர்த்தி செய்த விதைகளை 15 செ.மீ இடைவெளியில் வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடனடியாக நீர்ப் பாய்ச்சவேண்டும். 7 நாட்களில் முளைப்பு வந்து விடும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பின்பு, நிலத்தின் அமைப்பிற்கு ஏற்ப பார் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
ஒரு மாத வயதான நாற்றுக்களை தான் நடவிற்கு பயன்படுத்த வேண்டும். வரிசைக்கு வரிசை 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
துலக்கமல்லி உரங்கள்:
ஒரு எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்கவேண்டும் அல்லது களை எடுக்கும் போது ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை வேர் பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.
துலக்கமல்லி பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்
8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். பின்பு தேவைக்கேற்ப களை எடுக்க வேண்டும். நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் கிளைகள் அதிகம் தோன்றி அதிகமான பூ மொட்டுகள் உண்டாகும்.
பயிர் பாதுகாப்பு
வேர் அழுகல் நோய்
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு, 1 கிராம் பெவிஸ்டின் மருந்து கலந்து செடியினைச் சுற்றி ஊற்றிவிடவேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த பெவிஸ்டின் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
சிவப்பு சிலந்தி பூச்சிகள்
சிவப்பு சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த கெல்தேன் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு, ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
நட்ட 60ம் நாளில் இருந்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். 80 முதல் 90 சதவீதம் வரை மலர்ந்த பூக்களை 3 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 18 டன் பூக்கள் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
துலக்கமல்லியை கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி ஆயிலாக மாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
துலக்கமல்லி பொடி மருந்து தயாரிக்க உதவுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் மாத்திரை கண் பாதிப்பை குணமாக்குகின்றது.
துலக்கமல்லி பூ கர்நாடகா மாநிலத்தில் அனைத்து விழாக்களுக்கும் முக்கிய பூவாக கருதப்படுகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்திற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Comments
Post a Comment
Smart vivasayi