வெங்காயம் பூச்சி மேலாண்மை
வெங்காயத்தை நான்கு வகையான பூச்சிகளும் இரண்டு வகையான நோய்களும் தாக்குகின்றன.இதில் முக்கியமான பூச்சி இலைப்பேன். நடவு செய்த 10-ம் நாளுக்கு மேல் இதன் தாக்குதல் இருக்கும். இது தாக்கினால், வெங்காயத்தாள்கள் காய்ந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இது இலையின் நுனியில் உள்ள பச்சையைச் சுரண்டிவிடும். இதனால், தாளின் நுனி கருகிவிடும். இதைப் பலரும் இலைக்கருகல் நோய் என நினைக்கிறார்கள். ஆனால், இது பூச்சியால் ஏற்படக்கூடிய பிரச்னை. பூச்சிவிரட்டிதான் சிறந்த மருந்து. இலையில் பச்சையம் இல்லையென்றால் மண்ணுக்கடியில் வெங்காயம் வளர்ச்சியடையாது. எனவே வெங்காய இலைத்தாள்களைப் பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதைத் தடுக்க வெங்காயத்தை நெருக்கமாக நடவு செய்யக் கூடாது. அதிகளவு உரமிடக்கூடாது. இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்தும் இலைப்பேன் தாக்குதல் இருந்தால்… 10 நாள்கள் இடைவெளியில் கற்பூரக்கரைசலைத் தெளிக்க வேண்டும். இரண்டு மில்லி இஞ்சி-பூண்டு கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்களுக்குத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். அதிக பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்பவர்கள் இருபது வரிசைக்கு ஒரு வரிசை சூரியகாந்தியை நடவு செய்ய வேண்டும். குறைவான பரப்பில் நடவுசெய்பவர்கள் வரப்பு ஓரங்களில் சூரியகாந்தியை நடவு செய்யலாம். இப்படிச் செய்வதால் இலைப்பேன் பிரச்னையைக் குறைக்கலாம். வெங்காய வயலில் களை இருக்கவே கூடாது. களைச்செடிகளில் இலைப்பேன் இனப்பெருக்கம் செய்யும். 500 கிராம் பூண்டை இடித்துச் சாறாக்கி அதில் 5 மில்லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து களைச்செடிகளில் வரும் முன் காப்பானாகத் தெளித்தால், இலைப்பேன் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
வெள்ளை ஈ
நடவு செய்த 30-ம் நாள் பயிர் பச்சைக் கட்டி நிற்கும். பயிர் மிகவும் செழிப்பாக இருக்கும் நேரம். இந்த நேரத்தில் வெள்ளை ஈ தாக்குதல் தொடங்கும். இவற்றில் பெரிய புழுக்கள், தண்டை ஓட்டைப் போட்டு உள்ளே புகுந்து, மேலிருந்து கீழ்நோக்கி வெங்காயத்தைச் சுரண்டும். இது அடித்தாள் அருகே மண் இடுக்குகளில் முட்டை போடும். மண் பொலபொலப்பாக இருந்தால் முட்டை போட முடியாது. கட்டிக்கட்டியாக இருந்தால் முட்டை போடும்.
எனவேதான் வெங்காய வயலில் மண் பொலபொலப்பாக இருக்கவேண்டும். விதைத்த 30-ம் நாள் மூன்று சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசல் அல்லது தலா கால் கிலோ கொத்தமல்லி, புதினா இலைகளை இடித்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 5 மில்லி எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதைச் செய்தாலே வெள்ளை ஈ தாக்குதலைக் குறைக்கலாம். வெர்டிசிலியம் லெக்கானி என்ற நுண்ணுயிர் திரவத்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
வெட்டுப்புழு
இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்டு ஓட்டை ஓட்டையாக இருக்கும். பச்சையம் குறைந்த வெங்காயத்தாள்களால் தரமான வெங்காயத்தைக் கொடுக்க முடியாது. வளர்ந்த புழுக்கள் தாள்களை வெட்டிவிடும். இதனால், வெங்காயம் தனியாகவும், தாள் தனியாகவும் போய்விடும். இதோடு பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வெங்காயம் அழுகிக் காயும். வெட்டுப்புழுவைத் தடுக்க… வரப்பு ஓரங்களில் ஆமணக்கை நடவு செய்ய வேண்டும். தாய் அந்துப்பூச்சி, ஆமணக்கு இலையில் முட்டை வைக்கும். இந்த முட்டைகள் ஆமணக்கு இலைகளில் சந்தனக் கூடுபோல இருக்கும். அப்படி இருக்கும் இலைகளைப் பறித்து அழித்து விட வேண்டும்.
பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் என்ற நுண்ணுயிர் திரவத்தை 10 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் இரண்டு முறை தெளிக்க வேண்டும் அல்லது பெவேரியா பேசியானா என்ற பூஞ்சணப் பொடியை 5 கிராம் எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இதை ஏழு முதல் பத்து நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
நோய் மேலாண்மை: அடித்தாள் அழுகல்
வெங்காயத்தைப் பாதிக்கும் முக்கியமான நோய் அடித்தாள் அழுகல். இந்த நோய் தாக்கிய வெங்காயத்தாள்களின், தரையை ஒட்டிய தண்டுப்பகுதி அழுக தொடங்கும். இது இலைப்பேனால் ஏற்பட்டதா, இல்லை நோயா என்ற குழப்பம் வரும். நோய் தாக்கிய வெங்காயத்தில் தாள்கள் தனியாக விழுந்துவிடும். இதை வைத்துக் கணிக்க வேண்டும். நடவு செய்யும்போது விதைநேர்த்தி செய்து நடவு செய்வதுதான், இந்த நோய் வராமல் தடுக்கும் எளிமையான வழி. நோய் தாக்கிய பயிரில், டிரைக்கோடெர்மா அஸ்பரெல்லம் (விரிடி) அல்லது சூடோமோனஸை 5 மில்லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
ஊதா கொப்புள நோய்
தாள் கருகி, நுனியைக் கத்தியால் சீவி விட்டதுபோல் சூம்பி இருக்கும். கருகிய தாள்களில் கறுப்பு நிறத்தில் வளையம் மாதிரி புண்கள்போல இருக்கும். குளிர் காலங்களில்தான் இந்த நோய் தாக்கும். இதற்கும் விதை நேர்த்திதான் தீர்வு. ஒரு கிலோ வெங்காயத்துக்கு டிரைக்கோடெர்மா ஹார்சியானம் என்ற எதிர் பூஞ்சணத்தை 10 கிராம் அளவில் எடுத்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நோய் தாக்கிய பயிர்களில் 5 சதவிகித வேப ்பங்கொட்டைச் சாறு மற்றும் 2 சதவிகித துளசிச்சாறு சேர்த்து தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
கரீப் பூட்டை வெங்காயம் அறுவடை செய்து ஒரு வாரம் கழித்துப் பார்த்தால், உள்ளே கறுப்பாகப் பூஞ்சணம்போல இருக்கும். உரிக்க உரிக்கச் சருகுதான் வரும். இந்த நோய் தாக்கிய வெங்காயம் தரம் குறைந்துவிடும். நல்ல விலை கிடைக்காது. வீட்டில் உள்ள வெங்காயங்களில் சிலவற்றின் முனைகளில் கறுப்பாக இருப்பதைப் பார்க்கலாம். இதுதான் கரீப் பூட்டை நோய். இதைத் தடுக்கத் தலா ஒரு கிலோ குப்பைமேனி, காகிதப்பூ இலைகளை இடித்து, அதன் சாற்றுடன் இரண்டு லிட்டர் தண்ணீரைக்கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கலவையில் பத்து மில்லி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைவழித் தெளிப்பானாகப் பயன்படுத்தப்படும் பூஞ்சணம் மற்றும் பாக்டீரியா நிவாரணிகளைச் சூரிய வெப்பம் அதிகம் நிலவும் பகல் நேரங்களில் தெளித்தால் பலன் இருக்காது. ஆகவே, இந்த வகையான இயற்கை நிவாரணிகளை வெயில் குறைந்த காலை வேளையில் தெளித்துப் பயன்பெறலாம். மேலும் குளிர்காலத்தில் இந்த எதிர் பூஞ்சண, பாக்டீரியா நிவாரணிகள் நல்ல பலனைத் தந்து மகசூல் பெருக்கத்துக்கு வழிவகைச் செய்யும்.
அறுவடை
ரகத்துக்கு ஏற்றவாறு 70 முதல் 90 நாள்களில் வெங்காயத்தை அறுவடை செய்யலாம். அறுவடை செய்வதற்கு முன்பாகப் பாசனத்தை நிறுத்த வேண்டும். தாள் 65 முதல் 70 சதவிகிதம் காய்ந்த பிறகுதான் அறுவடை செய்ய வேண்டும். மேலே தாள் காய்ந்தும், மண்ணுக்கு மேலே பச்சையாக இருக்க வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்தவுடன் தாளை வெட்டக்கூடாது. ஒரு நாள் காய விட வேண்டும். விலை கிடைத்தால் உடனே விற்பனை செய்யலாம். இல்லாவிடில் பட்டறையில் சேமிக்க வேண்டும். பட்டறையில் ஈரத்தோடு சேமிக்கக் கூடாது. தாளோடு அறுவடை செய்து, இரண்டு நாள்கள் நிழலில் காய வைத்துப் பட்டறையில் சேமிக்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi