ஒரு டன் அளவுள்ள தொழுவுரத்தை நான்காக பிரித்து வைத்துக் கொண்டு அதில் ஒரு பாகத்தை பத்தடி நீளம் 5 அடி அகலம் உள்ள படுக்கையாக பரப்பி கொள்ளலாம்.
அதன்மேல் ஆவாரை, கொழிஞ்சி, எருக்கு ,வேம்பு ,நொச்சி போன்ற இலைகளை பரப்பலாம். ஒரு வகைக்கு 20 கிலோ என்று குறைந்தபட்சம் ஐந்து இலைகளை எடுத்துக் கொண்டு, அதனை தூளாக நறுக்கிய பின்பு கலந்து, அவற்றை நான்காக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் ஒரு படுகைக்கு குறைந்தபட்சம் 25 கிலோ இலைகள் கிடைக்கும்.
அதே போல் தரமான கரம்பை மண் இருந்தால் ஒரு டிராக்டர் லோடு எடுத்துக் கொண்டு அதனை நான்காகப் பிரித்து வைத்துக் கொள்ளலாம்.
செய்முறை:
ஏற்கனவே படுக்கையாக பரப்பிய தொழு உரத்தின் மீது ஒரு கால் பங்கு தூளாக்கப்பட்ட (25 கிலோ) இலைகளையும் , ஒரு கால் பங்கு கரம்பை மண்ணை ஒன்றின் மேல் ஒன்று தூவி விடலாம். மீண்டும் இதே போல் மூன்று அடுக்கு ஒன்றின்மேல் ஒன்று இருக்குமாறு செய்யலாம். ஒவ்வொரு அடுக்கு செய்யும்போதும் 20 லிட்டர் வாளியில் அரை லிட்டர் அளவுக்கு மீன் அமிலம் அல்லது பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் கலந்து வைத்துக்கொண்டு அதனை தேவையான அளவு (5 லிட்) தெளித்து அடுத்த படுகையை இடலாம்.
இந்த அமைப்பை சிறப்பாக ஒரு படுகைக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லம் ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா அரை கிலோ சூடோமோனாஸ் பவுடராக கலந்து இதன் மேல் தூவிக் கொள்ளலாம். பொதுவாக இந்த வகையான ஊட்டமேற்றிய இலைகள் கலந்த தொழுவுரம் அமைத்த பின்பு அதன் மீது தென்னை மட்டை போட்டு மூடி வைக்கலாம்.
25 முதல் 30 நாட்களில் தரமான அதிக சத்து கொண்ட இலைகள் கலந்த ஊட்டமேற்றிய தொழு உரமாக கிடைக்கும்.
இந்த தொழு உரத்தை ஒரு மரத்திற்கு 10 கிலோ என்ற அளவில் தென்னை , மா போன்ற பெரிய மரங்களுக்கும்,
5 கிலோ என்ற அளவில் கொய்யா எலுமிச்சை மாதுளை போன்ற சிறிய வகை மரங்களுக்கும் மரத்திலிருந்து இரண்டடி தள்ளி சிறிதாக தோண்டி, உள்ளே போட்டு மூடி கொடுக்கலாம். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறு கொடுப்பது மரங்களில் அதிக பலன் கொடுக்கும். அதேவேளையில் குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது கொடுக்க வேண்டும்.
பிற வகை காய்கறி பயிர்கள் பயிரிடும் போது குறைவாக விளைச்சல் உள்ள நிலங்களில் அடியுரமாக ஒரு டிராக்டர் லோடு ஊட்டமேற்றிய இலைகள் கலந்த தொழுவுரத்தை கடைசி உழவிற்கு முன்பு பரப்பி தெளித்து உழுது பார் கட்டலாம்.
மீண்டும் பூ எடுத்து வரும் காலத்தில் குறைந்தபட்சம் அரை டிராக்டர் லோடு அளவுக்காவது தண்ணீர் செல்லும் பாதையில் இத் தொழுவுரத்தை தூவி பின்னால் நடந்து சென்றால் ஈரத்தில் பூமிக்குள் இறங்கி அதிக விளைச்சலை தரும்
இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஊட்டமேற்றிய தொழு உரம் அதிக வேர்களையும் ,அதிக சல்லி வேர்களையும் உருவாக்குவதோடு மிக அதிகமான பலன்களை கொடுக்கும். பிற வகையான இயற்கை இடுபொருட்கள் தேவையில்லாத அல்லது குறைந்த அளவில் போதுமென்ற சூழ்நிலையும் உருவாக்கும். இதனால் குறைந்த உற்பத்தி செலவில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு.
Comments
Post a Comment
Smart vivasayi