கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு (ராகி) சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலைபகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது.
கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும்.
இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பையாகும்.
எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம் கேழ்வரகு ஆகும்.
இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது.
கோ 11, கே 5, கே 7, கோ 7, ஜி.பி.யு -28, கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1, பையூர் 1 ஆகிய இரகங்கள் உள்ளன.
டிசம்பர்- ஜனவரி, செப்டம்பர்- அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை ஆகும்.
எல்லா வகையான மண்களிலும் பயிர் செய்யலாம் எனினும் செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் ஏற்றது.
ஒரு எக்டருக்கு 15-20 கிலோ விதைகள் தேவைப்படும்.
ஒரு எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட், 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்:
வறண்ட நிலையில் இருக்கும் பொழுது நிலத்தை தயார் செய்ய வேண்டும். தொழு உரம் இட்டு நன்றாக உழவேண்டும். தேவைப்பட்ட நீளமும், 1 மீ அகலமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். விதையை ஈரக்கோணியில் போட்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். விதைப்படுக்கையை சமம்படுத்தி படுக்கையின் மேல் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும். அதற்கு மேல் விதைகளை பரவலாக தூவவேண்டும்.
40 சதுர மீட்டர் பரப்பிற்கு 1.25 கிலோ அளவு விதை போதுமானது. தொழு உரம் மறுபடியும் இட்டு விதைகளை மூடவேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நீர் பாய்ச்ச வேண்டும். நாற்று படுக்கையில், எந்தவித இரசாயன உரங்களையும் இடக்கூடாது. 10-15 நாட்களில், நல்ல வளமான, வீரியமுள்ள நாற்றுக்கள் நடவுக்கு தயாராகிவிடும்.
நிலம் தயாரித்தல்:
கட்டிகள் இல்லாத அளவுக்கு நிலத்தை நன்றாக உழுது 4 டன் மாட்டு எருவைத் தூவி உழவு செய்து, பாசனம் செய்ய வசதியாக பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
படுக்கை சமமாக இருந்தால் நீர் போக எளிதாக இருக்கும். 18 முதல் 20 நாட்கள் ஆன நாற்றுகளை 30×10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 3 செ.மீ ஆழத்தில் ஒரு குத்துக்கு 2 நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நேரடி விதைப்பாக இருந்தால் 22×10 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நாற்று நடும் முன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள் :
ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 60:30:30 கிலோ விகிதத்தில் இட வேண்டும். பயிர்கள் மேல் தெளிப்பாக பஞ்சகாவியா இஎம் கரைசல் மற்றும் மீன் அமிலத்தை கொடுக்கலாம். தரைவழி மீன் அமிலம் ஜீவாமிர்தம் இஎம் கரைசல் கொடுக்கலாம்.
அடி உரமாக மணி, சாம்பல் சத்துகளை முழுமையாக இட வேண்டும். தழைச்சத்தை மட்டும் பாதி அளவு இட்டு, மீதமுள்ளவற்றை சரி பாதியாக 23, 30, 40-வது நாட்களில் இட வேண்டும்.
விதைத்த 20 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 10, 20 நாட்களில் இருமுறை கையால் களையெடுக்க வேண்டும்.
அறுவடை:
கேழ்வரகுப் பயிர் ஒரே சீராக முதிர்ச்சியடைவதில்லை. எனவே, இருமுறையாக அறுவடை செய்ய வேண்டும். 50 சதவீத கதிர்கள் பழுப்பு நிறமடைந்த பிறகு அதை அறுவடை செய்யலாம்.
முற்றிப் பழுப்பு நிறமடைந்த அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும். தானியத்தைக் காயவைத்து கதிரடித்து தூற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
முதல் அறுவடைக்குப் பிறகு 7வது நாளில் அனைத்து தானியக் கதிர்களையும் பச்சையாக இருக்கும் கதிரையும் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த தானியங்களை உலர்த்துவதற்கு முன் குவியலாக நிழலில் ஒருநாள் வைப்பதால் வெப்பநிலை அதிகரித்து தானியம் தரமாகும். உலர்ந்த தானியத்தைக் கதிரடித்து புடைத்து, சுத்தப்படுத்தி சாக்குப் பைகளில் சேமிக்க வேண்டும்.
ஏக்கருக்கு 250 – 300 கிலோ மகசூல் கிடைக்கும்.
கேழ்வரகுடன் துவரை , உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை 8:2 விகிதத்தில் ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூலுடன், வருமானமும் கிடைக்கிறது.
Comments
Post a Comment
Smart vivasayi