*எலிக்கட்டுப்பாடு*
எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.
நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.
தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.
நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.
பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.
எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.
எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பும், எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.
எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.
எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும். ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.
ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.
பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.
வயல்வெளிகளில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள் .
1. கடலை உருண்டை
செய்முறை ;
வறுத்து, பொடித்த வேர்கடலை – அரை கிலோ
எள்ளு ( வறுத்து, பொடித்தது) – கால் கிலோ
வெல்லம் – அரை கிலோ
நெய் – சிறிதளவு.
சிமெண்ட் – அரை கிலோ.
பாத்திரத்தில் பொடித்த வேர்கடலை, எள்ளு, சிமெண்ட் போட்டு நன்கு கலந்த பின்னர் வெல்லத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கைகளில் தொடும்போது லேசான பிசுபிசுப்பு வந்த உடன், அப்பாகை கலவையில் சிறிது, சிறிதாக ஊற்றி குச்சியால் கிளறி பின் சிறிது நெய்யை விட்டு நன்கு கலந்து பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
இவ்உருண்டைகளை வரப்பில் உள்ள எலிவளைகளில் போடும்போது, எலிகள் கடலையின் வாசனையால் சாப்பிடும்.
இவ்வுருண்டைகளில் உள்ள சிமெண்ட் வயிற்றில் சென்று இறுகி விடுவதால் எலிகள் இறந்து விடும்.
2. கருவாடு, சிமெண்ட் கலவை.
செய்முறை ;
கருவாட்டை தணலில் இட்டு சுட்டு பின் பொடித்து, அதனுடன் சமஅளவில் சிமெண்ட் கலக்கவும்.
இக்கலவையை எலி நடமாட்ட பகுதிகளில் சிறு சிறு குவியலாக வைத்து செல்லவும்.
எலிகள் கருவாட்டு வாடையால் ஈர்க்கப்பட்டு இக்கலவையை உண்டு மடியும்.
முக்கிய குறிப்பு :
எலிகள் மிகுந்த மோப்பசக்தியும், அறிவும் படைத்தவை.அவைகளுக்கு ஒரு புதிய பொருளின் மேல் தொடர்ச்சியான ஒரே மாதிரியான வாடை இருந்தால் அவைகள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும்.
அதாவது இப்பொருட்களை நாம் தயாரித்து தொடர்ந்து வைக்கும்போது, ஆரம்பத்தில் எடுக்கும் பின் தொடர்ச்சியாக நம் வாடை, அப்பொருட்களின் மீது உணரப்படும்போது, அப்பொருட்களை எலிகள் எடுப்பதில்லை.
எனவே இது போன்ற பொருட்களை தயார் செய்யும் போதும், எலிக்கு வைக்கும்போதும் நம் வியர்வை அதில் படாதவண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் மற்றும் கைகளில் கட்டாயம் கையுறை அணிய வேண்டும்.
3. முட்டை கரைசல்.
செய்முறை ;
அழுகிய அல்லது சாதாரண முட்டைகள் பத்தை 25 லிட்டர் டிரம்மில் போட்டு முக்கால் பங்கு தண்ணீர் பிடித்து மூடி வைத்து விடுங்கள்.
ஒரு வாரம் கழித்து இக்லவையை வரப்புகள் மற்றும் வேலி ஓரங்களில் ஊற்றி விடும்போது எலி, முயல், அணில் போன்றவைகள் நம் வயலுக்குள் வருவதை தவிர்த்து விடும்.
தொடர்ச்சியாக பாசனத்தில் ஜீவாமிர்தம் மற்றும் மீன்அமிலம் கலந்து விடும்போது, எலிகளின் நடமாட்டம் அறவே இல்லாமல் போகின்றது. இரசாயன விவசாயத்தில் தான் எலிவெட்டு இருக்கும். முழுக்க இயற்கை விவசாயத்தில் எலி பிரச்சனைகள் கிடையாது. இது அனுபவத்தில் கற்றது.
பாம்புகளும், ஆந்தைகளின் நடமாட்டம் இருக்கும் வயல்களில் எலி தொந்தரவு அறவே கிடையாது.
ஆந்தைகள் இரவில் பறந்து வந்து அமர T வடிவ மர குச்சிகளை வயல்களில் ஆங்காங்கே நட்டு வைக்கலாம்.
பண்ணைகளில் உயிர்பன்மய சூழல் பேணி பாதுகாக்கப்படும்போது இது போன்ற பிரச்சனைகள் இருக்காது.
Comments
Post a Comment
Smart vivasayi