ஒரு காலத்தில் 'மைனர் பெஸ்ட்' ஆக இருந்த மாவுப்பூச்சி இன்று முக்கிய பூச்சியாக மாறி விட்டது. இதை கட்டுப்படுத்த பல்வேறு இணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். இப்பூச்சி பப்பாளி, மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி போன்ற பயிர்களையும், களைச் செடிகளையும் தாக்குகிறது. எதிர் காலத்தில் மக்காச்சோளம் போன்ற பிற பயிர்களை தாக்கக்கூடும். காற்று, பறவைகள், விலங்குகள், தண்ணீர், மனிதர்களால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் பரவக்கூடிய தன்மை உடையவை.
இப்பூச்சியின் உடல் முழுவதும் மெழுகு மற்றும் மாவு போன்ற வெள்ளை நிறப் பொருள்களால் கவரப்பட்டு இருப்பதால் இவற்றை எளிதில் கட்டுப்படுத்த இயலாது. இது அயல்நாட்டு பூச்சி என்பதாலும், இதற்கு இயற்கை எதிரிகள் இல்லாத காரணத்தாலும் இப்பூச்சிகள் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு ஆண்டில் இப்பூச்சி 15 முறை இனப்பெருக்கம் செய்து 500 முதல் 600 முட்டைகள் இடும். இதன் எண்ணிக்கை அதிகளவில் உற்பத்தியாகி மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது.
*அறிகுறிகள்:* இலையின் அடிப்பகுதி குருத்து, கிளைகள் மற்றும் தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். சிகப்பு மற்றும் கருப்பு எறும்புகள் நடமாட்டம் இருக்கும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசன வளர்ச்சியும் காணப்படும். அதிக தாக்குதலில் செடிகள், இலைகள் வாடி கருகி விடும்.
*மேலாண்மை:* களைகள் அகற்றி வயல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெயில் குறைவாக காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள போது இதன் தாக்குதல் இருக்கும். இந்த நாட்களில் *'வெர்டிசீலியம் லெகானி'* எனும் உயிரியல் பூச்சிக் கொல்லியை 1 லிட்டர் தண்ணீர் 5 கிராம் என்ற விகிதத்தில் ஒட்டும் திரவத்தை சேர்த்து பயன்படுத்தலாம். *'கிரிப்டோலாம்ஸ்'* அல்லது 'ஸ்கிம்ன்ஸ்' என்ற பொரி வண்டுகளை ஏக்கருக்கு 500 முதல் 600 வரை வாங்கி விடலாம்.
வேப்பங்கொட்டை கரைசலை 5 மில்லியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். களை செடியான அரிவாள்மனை பூண்டு தழையை அரை கிலோ 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறியவுடன் 20 கிராம் பெருங்காயத்துாள் சேர்த்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi