*வேளாண்காடுகளும் சந்தன மரவளர்ப்பும்*
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக்கூடிய மரங்களில் சந்தன மரமும் ஒன்று. இந்திய மக்கள் பல வகைகளில் சந்தனத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். தற்காலத்தில் காடுகளில் சந்தன மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது, சந்தன மரங்களை அதிகமாக வெட்டுவது மற்றும் காடுகளில் உள்ள மற்ற மரங்கள் சந்தனத்துடன் போட்டியிட்டு வளர்வதும் (Biotic interference) காரணமாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சந்தனமர உற்பத்தி 4,000 டன் என்ற அளவில் இருந்து தற்போது 300 டன் என மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் வேளாண்காடுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் சந்தன மரங்களையும் வளர்க்க வேண்டியது அவசியமாகிறது.
சந்தன மரங்களில் 47 வகைகள் இருப்பினும் சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்தான் தரமான சந்தனத்தைக் கொடுக்கிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும் சந்தனம் வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய அளவில் சந்தனம் சாகுபடி செய்யப்படுகிறது என்பதால் எதிர்காலத்தில் சந்தன ஏற்றுமதியில் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் பெறும் வாய்ப்புள்ளது.
இந்திய காடுகள் மற்றும் வேளாண் நிலங்களில் 17,000 ஹெக்டர் பரப்பளவில் சந்தனம் உள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 600 ஹெக்டேர் அளவுக்கு சந்தனமர சாகுபடி அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கர்நாடக மாநிலத்தில் 10,735 ஹெக்டேரில் சந்தனம் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசாங்கத்துக்கு சொந்தமான இடங்களில் 410 ஹெக்டேரிலும், தனியார் நிலங்களில் 80 ஹெக்டேரிலும் உள்ளது.
*சாகுபடி முறைகள்*
ஆழமான மண்கண்டமும், வடிகால் வசதியும் உள்ள எல்லா நிலங்களிலும் சந்தனம் வளரக்கூடியது. சிவப்பு லேட்டரைட், மணல் கலந்த களி, மணல் கலந்த கரிசல் போன்ற மண் வகைகள் உகந்தவை. 20 முதல் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள இடங்களில் நன்றாக வளரக்கூடியது.
10 ஆண்டுகள் வளர்ந்த மரங்களில் மட்டுமே விதைகள் தரமாக இருக்கும் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட மரங்களில் இருந்து மட்டுமே விதைகளை சேகரித்து நாற்றுகளை உருவாக்க வேண்டும், இளம் மரங்களில் இருந்து பெறப்படும் விதைகள் மரபுத்தன்மையில் (Genetically immatured) முதிர்ச்சி அடைந்திருக்காது.
குறைந்த பட்சம் ஒன்றரை அடி உயரமுள்ள தரமான நாற்றுக்களையே நடவுக்கு பயன்படுத்த வேண்டும். நடவு செய்து ஒரு வருடத்திற்கு பின்னர் உங்கள் நிலத்தில் சந்தன மரங்கள் உள்ளதை உள்ளூர் கிராம அதிகாரியிடம் பதிவு செய்வது மிக அவசியமாகும்.
*கலப்பு மரங்களும் துணைப்பயிர்களும்*
சந்தன மரத்தை கலப்பு மரங்களாக நடவு செய்வதே சிறந்தது, சந்தனம் என்பது ஒரு ஒட்டுண்ணித் தாவரமாகும், அதாவது மரத்திற்குத் தேவையான சில நுண்ணூட்டங்களை மற்ற தாவர வேர்களில் இருந்து எடுத்துக் கொள்கிறது, எனவே நாற்று நடும் பொழுதே கன்றின் அருகே துணை பயிர்களையும் நடவு செய்வது அவசியமாகும்.
துணைப்பயிராக கீரைகள் வகைகள், தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி, துவரை, தொட்டால் சிணுங்கி அல்லது வேறு ஏதேனும் பயறுவகை செடிகளை நாற்றின் அருகில் நடவு செய்யவேண்டும். அதே நேரத்தில் சில அடிகள் இடைவெளி விட்டு அகத்தி, துவரை, முருங்கை, பப்பாளி, மல்பெர்ரி போன்றவைற்றையும் நடவு செய்ய வேண்டும். மேலும் நீண்டகால துணைப்பயிர்களாக கீழ்கண்ட டிம்பர் மரங்களையும் பழமரங்களையும் நடவு செய்யலாம். சவுக்கு, வாகை, ஈட்டி, சிசு, புங்கன், மலைவேம்பு, வேங்கை, செஞ்சந்தனம், நெல்லி, மாதுளை, எலுமிச்சை, கொய்யா, சீதா, மா, புளி போன்றவை ஏற்றவை.
துணைப்பயிர்களை நடவு செய்யும்போது அவை வளரும் வேகம், அவற்றை வெட்டும் காலம், சந்தனத்துக்கும் துணைப் பயிர்களுக்குமான இடைவெளி போன்றவற்றை கவனித்து நடவு செய்ய வேண்டும். உதாரணமாக மலைவேம்பை சந்தனத்துடன் துணைப்பயிராக வளர்க்கும் போது 6 அல்லது 7 வது வருடத்தில் மலைவேம்பை அறுவடை செய்வது அவசியமாகும். மலைவேம்பு வேகமாக வளரக்கூடியது என்பதால் 7 வருடங்களுக்கு அதிகமாக வளரவிடும்போது மலைவேம்பு சந்தனத்தின் வளர்ச்சியை தடுத்துவிடும்.
*கவாத்து*
சந்தன மரத்தில் கவாத்து செய்வது மிகவும் அவசியமானது. மரத்திற்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றால் மரம் நேராக இருக்க வேண்டும். கன்றாக இருக்கும்போதே கிளைகள் வராமல் நேராக வளர்க்க வேண்டும். மூன்று கிளைகளாக மரம் வளர்ந்தால் அதிக வருமானம் வரும் என நினைக்கக் கூடாது. பல கிளைகள் வளர்ந்தால் அதில் இதய கட்டைகள் (Heart wood) முதிர்ந்திருக்காது. நேராக ஒரே மரமாக வளரும்போதுதான் தரமான கட்டைகள் கிடைக்கும். கிளைகளைக் கவாத்து செய்யும் போது மரத்தின் உயரம் மற்றும் பருமனை கவனித்து மரத்தின் அடியில் உள்ள கிளைகளை மட்டும் கவாத்து செய்ய வேண்டும். உச்சி வரை கவாத்து செய்தால் மரத்தின் உச்சி அதிகமாக கிளைத்து அதன் எடை தாங்காமல் மரம் வளைந்துவிட வாய்ப்புண்டு.
*அறுவடை*
பத்து வருடங்கள் வளர்ந்த ஒரு மரம் 10 செ.மீ சுற்றளவும், ஒரு கிலோ எடையுடையதாகவும் இருக்க
0 வருடம் வளர்ந்த மரம் 55 செ.மீ சுற்றளவும் 30 கிலோ எடையுடைய இதய கட்டையையும் கொண்டிருக்கும். எனவே குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் கழித்த பின்பே மரத்தை அறுவடை செய்வது லாபகரமானதாக இருக்கும். நன்கு முற்றிய மரங்களின் வேர்கள் மற்றும் கணுவுடைய மரமும் மதிப்பு வாய்ந்தவையாகும்.
*பாதுகாப்பு முறைகள்*
சந்தன மரத்தை வளர்ப்பதுடன் திருடர்களிடமிருந்து பாதுகாப்பதும் அவசியமாகும். பண்ணையைச் சுற்றி இரட்டை அடுக்கு வேலி அமைக்கலாம், காவலுக்கு நாய்களை வளர்ப்பதும் சிறந்தது. பண்ணையை கண்காணிக்கும் வகையில் அவ்வப்போது டிரோன் விமானத்தைப் பயன்படுத்தலாம். பண்ணையைச் சுற்றி ஆள் நடமாட்டத்தை சென்சார் மூலம் கண்டறிந்து ஒலியெழுப்பும் இயந்திரங்களை வேலியில் பொருத்தலாம். மேலும் ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் டைமண்ட் வேலியை கட்டி வெல்டிங் செய்து விடலாம்.
மேற்கண்ட முறையில் எப்படி பாதுகாத்தாலும் மரத்தை வெட்டி சென்று விடுவார்கள் என சந்தனம் வளர்க்க தயங்குபவர்களுக்கு ஒரு சிறந்த வழி உள்ளது. சந்தன மரக்கன்றை நடவு செய்யும் போது 3 அடி ஆழத்தில் நீளமான வாய்க்கால் எடுத்து அந்த வாய்க்காலில் தேவையான இடைவெளிவிட்டு கன்றுகளை நடவு செய்ய வேண்டும். மரம் வளர வளர வாய்க்காலில் மண் சரிந்து அடிமரத்தை மண் மூடிவிடும். மரம் வளர்ந்த பின் மரத்தை யாராவது வெட்டிச் சென்று விட்டாலும் அடிமரம் மண்ணிலேயே இருக்கும், அந்த மூன்று உயரமுள்ள அடிமரமே லாபகரமான வருமானத்தை நிச்சயம் தரும்.
Comments
Post a Comment
Smart vivasayi