ஒற்றை வரிசை முறை
இரட்டை வரிசை முறை
சதுர நடவு முறை
முக்கோண வடிவ நடவுமுறை
ஒற்றை வரிசை முறை
இந்த முறையில், வரிசைகளுக்கு உள்ளே இடைவெளி குறைவு, வரிசைக்கு இடையே உள்ள இடைவெளி அகலமாக இருக்கும்.
இந்த முறை மூலம் நல்ல காற்றோட்டமும், ஈரமான இலைகள் விரைவில் உலரவும், பூஞ்சாண நோய் தாக்குதல் குறையவும் வாய்ப்புள்ளது.
ஆனால், தோட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதால் விளைச்சல் குறைந்துவிடும்.
இரட்டை வரிசை முறை
இந்த முறையில், 2 வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளி 0.9 – 1.20 மீ மற்றும் மரத்திற்கு மரம் உள்ள இடைவெளி 1.2 – 2 மீ.
இந்த இடைவெளியில் இடை உழவு செயல்களை எளிதாக செய்ய முடிகிறது. சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ஆகும் செலவும் குறைகிறது.
சதுர நடவு முறை
இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். இந்த முறையில் வாழைத் தோட்டத்தை வடிவமைப்பது எளிது.
கன்றுகளுக்கு இடையே 1.8×1.8 மீ இடைவெளி தேவைப்படும்.
இந்த முறையில் கன்றுகளை சதுரத்தின் மூலைக்கு ஒன்றாக நடவேண்டும். நான்கு மரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் குறுகிய கால பயிர்களை பயிரிடலாம்.
முக்கோண நடவு முறை
இந்த முறை திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை நடவு செய்ய ஏற்ற முறையாகும்.
இதில் வரிசைகளுக்கு இடையே 1.5 மீ இடைவெளியும், மரத்திற்கு மரம் 1.8 மீ இடைவெளியும் விடவேண்டும்.
குழியில் ஊன்றும் முறை
சால் முறை
அகழி நடவு முறை
அடர் நடவு முறை
குழியில் ஊன்றும் முறை
புன்செய் நில சாகுபடி முறையில், குழியில் ஊன்றும் முறை பொதுவான ஒரு முறையாகும். 60x 60 x60 செ.மீ அளவுள்ள குழிகளை தோண்டி, அதில் மண், மணல், தொழு உரம் 1:1:1 என்ற விகிதத்தில் உள்ளவாறு கலந்து, நிரப்பவேண்டும். இதில், ஒரு குழிக்கு 2 (அ) 3 (அ) 4 பக்கக் கன்றுகள் வரை நடவு செய்யலாம்.
பக்கக் கன்றுகளை குழியின் நடுவில் நட்டு, மண்ணைச் சுற்றி அணைக்கவேண்டும். இது பொதுவாக குட்டை கேவண்டிஷ், ரஸ்தாளி, ரொபஸ்டா, பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழை இரகங்களில் பின்பற்றப்படுகிறது.
சால் முறை
இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். நிலத்தை தயார் செய்த பிறகு, 20-25 செ.மீ ஆழமுடைய குழிகளை 1.5 மீ இடைவெளி இருக்குமாறு அமைக்க வேண்டும். இதில் பக்கக் கன்றுகளை சால்களில் தேவையான இடைவெளி விட்டு நடவேண்டும். தொழு உரத்தை மண்ணுடன் கலந்து இட்டு, பக்கக் கன்றுகளை சுற்றிலும் மண்ணை இறுக்கமாக அணைக்க வேண்டும். வருடா வருடம் சாகுபடி செய்யும் முறைகளில் சால்களில் நடும் முறையே பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் கிழங்குகள் வெளியே தெரிவதால், மண் அடிக்கடி அணைக்கவேண்டும்.
அகழி நடவு முறை
தமிழ்நாட்டில் காவேரி டெல்டா பகுதியின் நன்செய் நில சாகுபடியில் இந்த அகழி நடவு முறை வழக்கத்தில் உள்ளது. நெல்லைப் போன்று அதிகப்படியான நீர் பயன்படுத்தி, நிலம் தயார் செய்யப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் நீரை வயலில் நிறுத்தி வைத்து, பின் வயலில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும். சேற்று வயலில் பக்கக் கன்றுகளை மண்ணில் அமிழ்த்தி நடவு செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து 15 செ.மீ ஆழமுள்ள அகழிகள் தோண்டி, ஒவ்வொரு பாளத்திலும் 4 (அ) 6 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
பக்கக் கன்றுகள் 1-3 இலைகள் வரும் வரை நடவு செய்து ஒரு மாதத்திற்கு பிறகு 20-25 செ.மீ ஆழத்திற்கு அகழிகளை ஆழப்படுத்தவேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்த மூன்றாவது மாதத்தில் அகழிகளை 60 செ.மீ இருக்குமாறு அகலப்படுத்தி, ஆழப்படுத்தவேண்டும். சில அகழிகள் வடிகால்களாக பயன்படுத்தப்படுகிறது. 2 மாதங்களுக்கு பிறகு, அகழிகளை சுத்தப்படுத்தவேண்டும். அங்கக சுழற்சிக்காக பயிர்களின் மட்கிய கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம்.
அடர் நடவு முறை
அடர் நடவு முறை என்பது பொதுவாக பரிந்துரைக்கப்படும் இடைவெளியை விட குறைந்த இடைவெளியில் நடவு செய்வதாகும்.
இந்த முறையில் ஒரு எக்டருக்கு 4400 – 5000 வாழை மரங்களை வளர்க்கலாம். மகசூலும் ஒரு எக்டருக்கு 55 – 60 டன் அதிகமாகக் கிடைக்கும். பொதுவாக சதுர அமைப்பு (அ) செவ்வக அமைப்பு முறையில் நடவு செய்யப்படுகிறது.
ஒரு குழியில் மூன்று பக்கக் கன்றுகளை 1.8×2.0 மீ ( 4600 கன்றுகள்/எக்டர்) என்ற இடைவெளி கேவண்டிஷ் இரகத்திற்கும், நேந்திரன் இரகத்திற்கு 2×3 மீ ( 5000 கன்றுகள் /எக்டர்) என்ற இடைவெளியும் விடப்படுகிறது.
Comments
Post a Comment
Smart vivasayi