முன்னுரை
வருடமுழுவதும் நில மூடாக்கு (மல்ச்சிங் ஷீட்) முறையில் செட்டுநீர் பாசனம் அமைத்து கத்தரிக்காய் சாகுபடி செய்யலாம். இதனால் குறைந்த செலவில் அதிக லாபம் எடுக்க முடியும். நில மூடாக்கு முறையால் களை செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படுவதால் வேலை ஆட்களின் தேவை குறைவே. மேலும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய முடியும்.
பட்டம்
தை பட்டத்தில் (ஜனவரி-பிப்ரவரி) நடவு செய்யலாம். நிலத்தின் கார அமிலத்தன்மை 6.5 - 7.5 ல் இருக்க வேண்டும்.
நிலம் தயாரிப்பு
நிலத்தை மண்கட்டிகள் இல்லாமல் 3-4 உழவு ஓட்ட வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் தொழுவுரம் அல்லது 2 டன் மண்புழு உரம், 2 கிலோ சூடோமோனஸ், 2 கிலோ பாஸ்போ பாக்டிரியா, 2 கிலோ வேம், 2 கிலோ டிரைக்கோடெர்ம்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து நிலத்தில் சீராக தூவி விட்டு உழவு ஓட்ட வேண்டும்.
மூடாக்கு அமைக்கும் முறை
ஒரு ஏக்கரில் மூடாக்கு அமைக்க 30 மைக்ரான் சீட் 90 கிலோ தேவைப்படும். அதேபோன்று சொட்டு நீர் பாசனம் அமைக்க 22 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும்.
ஒரேமாதிரியான பார்கள் அமைக்க வேண்டும். அதாவது 3 அடி அகலமும் ஒரு அடி உயரமும், ஒரு அடி இடைவெளியும் இருக்குமாறு பார்கள் அமைக்க வேண்டும். பாருக்கு மேல் மல்ச்சிங் சீட்டை விரித்து, அதன் இரண்டு ஓரங்களிலும் மண் அணைக்க வேண்டும். மல்ச்சிங் சீட்டின் நடுப்பகுதியில் சொட்டு நீர் பாசன குழாய்களை அமைக்க வேண்டும்.
சொட்டு நீர் குழாய்கள் அமைத்த பின் இரண்டு அடி இடைவெளியில் மல்ச்சிங் சீட்டின் நடுப்பகுதியில் 2 இஞ்ச் குழாய் மூலம் ஓட்டை போட்டு, அதில் சொட்டு நீர் குழாய் மூலம் தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் விட்ட பின்பு கத்தரி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நாற்று நேர்த்தி
கத்தரி நாற்றுகளை நடவு செய்வதற்கு முன் நாற்று நேர்த்தி செய்து நட்டால் நோய் தாக்குதல் வராமல் தடுக்கலாம். அதாவது 20 லிட்டர் சாணிப்பால் கரைசலில் டிரைக்கோடெர்ம்மா விரிடி, சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், இவற்றில் ஒவ்வொன்றிலும் அரை கிலோ வீதம் எடுத்து நன்றாக கலக்க வேண்டும், பின் இக்கரைசலில் நாற்றுகளை 10 நிமிடம் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
நீர் பாசணம்
கத்தரி நாற்றுகள் நடவு செய்தவுடன் முதல் முறையும், மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் பாய்ச்ச வேண்டும். கரிசல் மண்ணாக இருந்தால், வாரம் ஓரு முறையும். செம்மண்ணாக இருந்தால், 5 நாட்களுக்கு ஓரு முறையும், பிறகு தேவைக்கேற்ப நீர் பாய்ச்சனும்.
உரமிடும் முறை
வாரம் ஒரு முறை 2 கிலோ வீதம் கரையும் உரங்களை (19:19:19, மல்டிகே, பொட்டாஸ்) சொட்டு நீர் உர தொட்டி (வெஞ்சுரி) மூலம் விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 2 லிட்டர் பஞ்சகவ்யா, 100 லிட்டர் இ.எம் கரைசல் போன்ற இயற்கை உரங்களை விடுவதன் மூலம் பயிர் செழித்து வளரும்.
பூச்சி தாக்கம்
கத்தரி வயலில் உள்ளே சென்றால் சிறிய சாறு உறிஞ்சும் பூச்சிகள் பறக்கும். இவைகள் இலையின் சாற்றை உறிஞ்சுவதால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் இவைகள் நச்சுயிரி நோயை பரப்பும். இந்த சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மஞ்சள் அட்டை ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 8 இடத்தில் கட்டிவைத்து அழிக்கலாம். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதனால் சிற்றிலை நோய் வராமல் தவிர்க்க முடியும்.
காய்ப்புழு தாக்கம்
கத்தரி செடியில் பூ, பிஞ்சு, காய்களில் காய்ப்புழு துளையிட்டு சேதத்தை ஏற்படுத்தும். இதனை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா முட்டை ஓட்டுண்ணி அட்டை ஓரு ஏக்கருக்கு 4 சிசி கட்டி காய்ப்புழுவை கட்டுப்படுத்தலாம். மேலும் சர்க்கரை 100 கிராம், பிவேரியா பேசியானா 500 கிராம் என்ற அளவில் கலந்து மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நூற்புழு தாக்கம்
நூற்புழு தாக்கம் வராமல் தவிர்க்க இரண்டு பார்களுக்கு இடையில் 5 அடிக்கு ஒரு செண்டுமல்லி செடியை நடவேண்டும். மேலும் வரப்பு ஓரங்களில் 2 அடிக்கு ஒரு செண்டுமல்லி செடி நடவு செய்ய வேண்டும்.
முடிவுரை
விவசாயிகள் தண்ணீர் தேவையை உணர்ந்து, நிலத்தில் மூடாக்கு (மல்ச்சிங் ஷீட்) அமைத்து பயிர் சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உண்டு. பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு மூடாக்கு அமைக்க முடியாத விவசாயிகள் காய்ந்த சருகுகள், தென்னை நார்க்கழிவு, வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு மூடாக்கு அமைக்கலாம். இது மிகசிறந்த முறையும் கூட, இதனால் மண்ணில் ஈரம் பாதுகாக்கப்பட்டு நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும், மண்புழு மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து, மகசூல் கூடும்.
Comments
Post a Comment
Smart vivasayi