தேவையான பொருட்கள்:
1. 100 ml வேப்பெண்ணை (neem oil).
2. பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர்.
3. பயிறுனுடைய வயதிற்கேற்ப கற்பூர வில்லைகள். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான வயதிருந்தால் 5 வில்லைகள். ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களுக்கு 8 வில்லைகள் வரை குடுக்கலாம். கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் 8 வில்லைகள் கொடுக்கலாம். வெயில் குறைவான காலங்களில் 10 வில்லைகள் வரை கொடுக்கலாம்.
(இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரம் கிடைத்தால் உபயோகிக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லையெனில் சாமி கும்பிட உபயோகிக்கும் கற்பூரம் போதுமானது. )
செய்முறை:
கற்பூரம் தண்ணீரில் கரையாது, கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் கற்பூரத்தை கரைக்கும். எத்தனால் இயற்கையான ஒன்று அதனால் இதை உபயோகிக்கலாம். நீலகிரி தைலம் (யூகலிப்டஸ் ஆயில்) கற்பூரத்தை கரைக்கும் தன்மை கொண்டது இதனையும் உபயோகிக்கலாம். சர்ஜிக்கல் ஸ்பிரிட் கற்பூரத்தை கரைக்கும். அனால் இது கெமிக்கல் கலந்து தயாரிக்கப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற வேண்டும். இதற்கு இயற்கை ஷாம்புக்களை உபயோகிக்கலாம். சீக்காய் அல்லது சோப்பு காய் என்று சொல்வார்கள் (நகை பாலீஸ் செய்பவர்கள் இந்த கொட்டையை பவுடராக உபயோகிப்பார்கள்) இதனை வேப்பெண்ணையுடன் கலப்பதால் வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்ற முடியும். சோப்பு ஆயில் மற்றும் காதி சோப்பு உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறு வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்றும் என்ற கருது உள்ளது(சோதனை செய்து பார்க்கப்படவில்லை).
வேப்பெண்ணெய்யை தண்ணீரின் திட நிலைக்கு மாற்றிய பிறகு, இந்த கரைசலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1.5 ஸ்பூன் கிளிஞ்சல் சுண்ணாம்பு கலந்து கொள்ளவும். இதனால் நாட்பட்ட பூச்சி தாக்குதல்களையும் கட்டுப்படுத்தலாம்.
பின்னர் இந்த இரண்டு கலவையையும் சேகரித்து வைத்துள்ள கோமியத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்பிரேயரில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி பின்பு கரைத்து வைத்துள்ள கற்பூர கரைசல் மற்றும் வேப்பெண்ணை கரைசலை கலந்து கொள்ளவும். பிறகு இஸ்பிரேயரில் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்பொழுது அணைத்து கரைசல்களும் தண்ணீருடன் நன்றாக கலந்துவிடும். பிறகு இதனை செடிகளுக்கு அடிக்கலாம்.
பயன்கள்:
கற்பூர கரைசல் பயிர்களுக்கு மிகச்சிறந்த பயிர் ஊக்கி ஆகும். இந்த கரைசலை பயிர்களுக்கு கொடுப்பதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மகசூலும் அதிமாக இருக்கும்.
முருங்கைக்கு கொடுப்பதால் 20 நாட்களில் காய் பறிக்கலாம். எள் பயிருக்கு 2-3 முறை கொடுப்பதால் செடிகள் நன்றாக, உயரமாக வளரும் பூக்களும் அதிகம் பிடிக்கும். எலுமிச்சை மற்றும் மல்லிகை பூ ஆகியவற்றில் தொடர்ச்சியாக காய்கள் மற்றும் பூக்கள் அறுவடை செய்யலாம். மிளகாய்க்கு ஆரம்பத்திலிருந்து கொடுப்பதால் முடக்கு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.
வெங்காயத்தில் நுனி காய்கள் வராது. உளுந்து பயறில் அளவுக்கு அதிகமான பூக்கள் பூக்கும். வேர்கடலையை இல்லை பூச்சி தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். இதன் காரணமாக நல்ல ஒளிசேர்க்கை நடைபெற்று அதிக மகசூல் கிடைக்கும்.
பருத்திக்கு ஆரம்பத்திலிருந்து கற்பூர கரைசல் கொடுத்து வந்தால் காய் துளைப்பான் நோயை முற்றிக்கும் தடுக்கலாம். மேலும் அதிகமான பூக்கள் வருவதால் அதிக காய்பிடிப்பு இருக்கும். கற்பூர கரைசல் பருத்தி செடியின் ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது, இதனால் அதிகமான மகசூல் கிடைக்கும்.
கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டியாக பயன்படுகிறது. மேலும் மிக சிறந்த பயிர் ஊக்கியாகவும் செயல் படுகிறது. பூக்கள் வருவதற்க்கு காரணமான ஹார்மோன்களை கற்பூர கரைசல் தூண்டுவதால் அதிகமான பூக்கள் உண்டாகி அதிக மகசூலை குடுக்கும்.
மாவு பூச்சியை கற்பூர கரைசல் மணி நேரத்திற்குள் கட்டுப்படுத்திவிடும். வேறு எந்த மருந்தும் இதுபோல மாவு பூச்சியை கட்டுப்படுத்தாது.
கொய்யா மற்றும் பெருநெல்லியில் சாம்பல் நோயை முற்றிலும் தடுக்கும் தன்மை கொண்டது. கற்பூர கரைசல் கொடுப்பதால் அதிகமான பூக்கள் பூக்கும்.
கருவேப்பிள்ளைக்கு கற்பூர கரைசல் கொடுப்பதால் அணைத்து பூச்சி தாக்குதல்களிலிருந்து காக்கலாம். கரும் பச்சை நிற இலைகள் கிடைக்கும்.
கற்பூர கரைசல் அணைத்து வகையான பயிர்களுக்கும் பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கியாக பயன்படுகிறது.
Comments
Post a Comment
Smart vivasayi