Rabbit breeding
விவசாய உபதொழில்களில் முக்கியமானது கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு, கோழி, பன்றி என கால்நடைகளை வளர்த்து லாபம் பார்த்து வரும் விவசாயிகள் அநேகம் பேர் உள்ளனர். அவற்றில் குறைந்த முதலீட்டில் லாபம் கொடுக்கும் பண்ணைத் தொழிலில் முயல் வளர்ப்பும் அடங்கும்.
குறைந்த இடமே போதும்!
“முயல் வளர்ப்புக்கு பெரியளவுல இடம் தேவையில்லை. அதிக நேரம் செலவழிக்க வேண்டியதும் இல்லை. முதலீடும் குறைவுதான். வீட்டுல கொஞ்சம் இடம் இருந்தாலே போதும். அதுல முயல வளர்த்து நல்ல லாபம் எடுக்க முடியும்.
காலையில் பசுந்தீவனம், மாலையில் அடர்தீவனம்!
காலையிலும், மாலையிலும் முயலுக்கு உணவு கொடுத்தால் போதுமானது. காலை 10 மணியளவில்... முட்டைகோஸ் தோல், கேரட் இலை, நூக்கல், ஆலமர இலை, வேலிக்காத்தான் இலை, வாழை இலை, முள்ளங்கி இலை, அகத்திக்கீரை, வேலிமசால்.... என கிடைக்கும் பசுந்தீதீவனத்தைக் கொடுக்கலாம். ஒரு முயலுக்கு ஒரு கைப்பிடி அளவு கொடுத்தால் போதுமானது. தினமும் ஒரே இலையைக் கொடுக்காமல் மாற்றி மாற்றிக் கொடுப்பது நல்லது.
கம்பு 30 கிலோ, மக்காச்சோளம் 30 கிலோ, மிருதுவான கோதுமைத் தவிடு 25 கிலோ, கடலைப் பிண்ணாக்கு 13 கிலோ, தாது உப்பு 1.5 கிலோ, உப்பு அரை கிலோ எடுத்து அனைத்தையும் ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மாலை 6 மணியளவில் இந்த அடர் தீவனத்தை ஒரு முயலுக்கு 100 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும் குடிக்கத் தண்ணீரையும் வைக்க வேண்டும்.
கொட்டகை கவனம்!
முயல்களுக்கான கொட்டகைகளை காற்றோட்டம் இருக்குமாறு அமைக்க வேண்டும். தென்னை மற்றும் பனை ஓலைகளால் அமைப்பது நல்லது. கொட்டகைக்குள் வெளிச்சம் குறைவாக இருக்குமாறு அமைக்க வேண்டும். தகரத்தில் கொட்டகை அமைத்தால் வெயில் காலத்தில் தகரக்கூரை மீது தென்னை ஓலைகளை பரப்பி வைக்கலாம்.
மருத்துவ குணமும் உண்டு!
முயல் இறைச்சியில் குறைவான கொழுப்பும், அதிக புரதமும் உள்ளன. அதனால், ஆரோக்கியத்துக்கு ஏற்ற இறைச்சி இது. முயல் இறைச்சிக்கு குடல்புண், மலச்சிக்கல் ஆகியவற்றைத் தீர்க்கும் குணமுண்டு. முயல் இறைச்சியில் சோடியம் குறைவாக உள்ளதால், இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஏற்றது.
ஆண் முயல்களை பிரித்து வைக்க வேண்டும்!
6 மாத வயதில் பெண் முயல் பருவத்துக்கு வரும். 8 மாத வயதில் ஆண் முயல் பருவத்துக்கு வரும். பெண் முயல் இணை சேரும் பருவத்துக்கு வந்து விட்டால்... மூலையில் வலை தோண்டுவது போல கால்களால் பறிக்கும். அமைதியில்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த செயல்பாடுகள் மூலம் கண்டுபிடித்து இணை சேர்க்கலாம்.
பெண் முயலையும், ஆண் முயலையும் கூண்டில் விட்டு இரண்டு நாட்களில் பிரித்து விட வேண்டும். இணை சேரும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆண் முயல்களைத் தனியாக பிரித்துதான் வைக்க வேண்டும். இணை சேர்ந்த 28-ம் நாளில் இருந்து 30-ம் நாளுக்குள் குட்டி ஈனும். குட்டி ஈனுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முயல் தன் ரோமங்களை உதிர்க்க ஆரம்பிக்கும். அந்த ரோமங்களை குவித்து அதன் மீதுதான் குட்டி ஈனும். இந்த அறிகுறியை வைத்து குட்டி ஈனுவதைக் கண்டுபிடிக்க முடியும்.
எட்டு குட்டிகளுக்கும் அதிகமாகப் பிறந்தால், நாம் தான் ஒவ்வொரு குட்டியாக எடுத்து பாலூட்ட வேண்டும். குட்டிகள் 12-ம் நாள் கண் திறக்கும். அதுவரை ஒரு பெட்டிக்குள் முயலின் ரோமங்களை வைத்து மெத்தை போன்று அமைத்து குட்டிகளை அதன் மீது படுக்க வைக்க வேண்டும். குட்டிகளுக்கு குளிர் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறந்த 22-ம் நாள் வரை தாய் முயல், குட்டிகளுக்குப் பால் தரும். அதன்பிறகு குட்டிகளே இலைகளை உண்ண ஆரம்பித்து விடும். 45-ம் நாளில் குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து விட வேண்டும். அதன்பிறகு தாய் முயலை மீண்டும் இணை சேர்க்கலாம்.
நான்கு மாத வயதில்தான் பாலினம் கண்டுபிடிக்க முடியும். அந்த சமயத்தில் ஆண், பெண் முயல்களை தனித்தனியாகப் பிரித்து கூண்டுகளில் அடைக்க வேண்டும்.
காதைப்பிடித்து தூக்கக் கூடாது
முயல்களைப் பெரும்பாலும் காதைப்பிடித்துதான் தூக்குவார்கள். ஆனால், அது தவறு. இடுப்பைப் பிடித்துதான் தூக்க வேண்டும். முயலை அடிக்கடி தூக்கினால் ரோமங்கள் உதிரும். அதனால், தேவையில்லாமல் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
குடற்புழு நீக்கம் அவசியம்!
முயல்களுக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை... மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தைக் கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். முயல்களுக்கு சொறி நோய் தாக்கினால், வேப்பெண்ணெய் தடவ வேண்டும். வேறு நோய்கள் பெரும்பாலும் வராது.சுத்தம் முக்கியம்!
கொட்டகையில் சிதறிக்கிடக்கும் தீவனங்கள், கழிவுகளை தினமும் தவறாமல் அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறை தீவனம் வைக்கும்போதும், தண்ணீர் வைக்கும் போதும் கிண்ணங்களை சுத்தமாகக் கழுவித்தான் வைக்க வேண்டும். தினமும் முயல்கள் சரியாக சாப்பிடுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi