பயிர்களுக்கு நட்பா, மாற்றா?
களைகள் மண்ணின் மருத்துவர் என சொல்லுவார்கள்.
ஏன், எப்படி?!
உங்கள் வயலில் என்ன என்ன களைகள் வளர்ந்திருக்கிறது, பக்கத்து தோட்டத்தில் என்ன என்ன வளர்ந்து வருகிறது என பொறுமையுடன் கவனியுங்கள்.
சில களைகள் பொதுவானதாக இருக்கும். ஆனால் உங்கள் வயலில் இருக்கும் மற்ற களைகள், அடுத்த வயலில் உள்ள களைகளுக்கு மாறுபடும்.
ஏன் ஒரு வயலுக்கும், அடுத்த வயலுக்கும் களைகள் வித்தியாசப் படுகிறது என யோசித்தது உண்டா?
பொதுவாக மண்ணை மேம்படுத்தும் வகையில் தான் களைகள் தோன்றும்.
எந்த சத்துக்கள் குறைந்து இருக்கிறதோ அதை ஈடு செய்யும் வகையில் தான் களைகள் தோன்றும்.
அடுத்து திரு அரசூர் செல்வம் அவர்கள் ஒருமுறை சொன்னதை கேட்டிருக்கிறேன்.
களைகளை வேரின் அமைப்பை கொண்டும் பகுத்து பார்க்கலாம்.
1. ஆணிவேர் உள்ளவைகள்.
2. கிளைவேர்கள் உள்ளது.
3. இந்த இரண்டும் அல்லாத சல்லிவேர்களை கொண்டதாக இருக்கும்.
கவனித்துப் பாருங்கள்.
சில வயல்களில் ஆணி வேர் களைகள் அதிகம் தோன்றும்.
இதன் வேர்கள் அதிக ஆழம் செல்லக் கூடியது.
சில வயல்களில் ஆணி வேர் களைகளை பார்க்க இயலாது. கிளை வேர்கள் உடைய களைகள் அதிகம் இருக்கும்.
சில வயல்களில் இந்த இரண்டும் இருக்காது.
பதிலாக சல்லி வேர்களை கொண்ட களைகள் மட்டுமே இருக்கும்.
ஏன் இந்த வித்தியாசம்?
(களைகளில் கோரையும் அருகும் விதிவிலக்கு. இவை அனைத்து வயல்களிலும் வளரும். )
1)ஆணி வேர் களைகளின் வேர் மண்ணில் அதிகம் ஆழம் செல்லும்.
2)பக்க வேர்கள் கொண்ட களைகளின் வேர்கள் ஆழம் செல்லும், ஆனால் அதிக ஆழம் செல்லாது.
3)சல்லி வேர் களைகளின் வேர்கள் மண்ணின் மேல் மட்டத்தோடு நின்றுவிடும்.
இதன் வழியாக களைகள் சொல்லுவது,
ஆணி வேர் களைகள் அதிகம் உள்ள நிலங்களில் அதிக சத்து குறைபாடு உள்ளது என பொருள் கொள்ளுங்கள்.
அதனால் அந்த களைகள் அதிக ஆழம் சென்று குறைந்துள்ள சத்துக்களை அடிமட்டத்தில் இருந்து எடுத்து வருகிறது.
அந்த சத்துக்கள் அந்த தாவரத்தில் சேமிக்கப்படுகிறது.
அது மண்ணில் சேரும்போது அந்த சத்துக்கள் மேல் மண்ணுக்கு கிடைக்கும்.
(இந்த இடத்தில் புரிதலுக்காக ஒரு செய்தியை சொல்கிறேன். சுமார் 11" மேல் மண் தான் பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது)
இந்த நிலையில் மண்புழு செயல்பாடுகளை நினைவு கொள்ளுங்கள்.
2) பக்க கிளைகள் உள்ள களைகளை கொண்ட வயல்கள் ஓரளவுக்கு சத்துக்கள் கொண்டவைகள் என எடுத்துக் கொள்ளலாம். குறைபாடு உள்ள சத்துக்கள் கொஞ்சம் மேல் நிலையிலேயே கிடைக்கும்.
3) சல்லி வேர்களை கொண்ட களைகளை கொண்ட வயல்கள் சத்துள்ள மண் என எடுத்துக் கொள்ளலாம் .
அதாவது தேவைக்கேற்ப வேர்கள் வளரும் என சொல்லுவார்கள்.
ஒவ்வொரு களையிலும் ஒரு சத்து மிகுந்திருக்கும்.
அதனால் களைகளை கொண்டு மண்ணில் எந்த சத்துக்கள் குறைந்து இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
அதனால் தான் களைகள் #மண்ணின் டாக்டர் என சொல்லுவார்கள்.
இந்த இயற்கையின் செயல்பாட்டை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் அதுவும் இல்லை.
களைகளை வெட்டியெடுத்து வெளியே கொட்டி விடுகிறோம், பின்னர் நெருப்பு வைத்து எரித்து விடுகிறோம்.
சரிதானுங்களே?!
வயல் சுத்தமாக இருப்பதில்லை பெருமையேதும் இல்லை.
அது ஆடையை அணியாத உடம்பு போல.
பயிர்கள் உள்ள வயலில் களைகளை பிடுங்கி அப்படியே மூடாக்கு போட்டால் நல்லது.
பயிர் செய்யாத வயலில் உழுது மண்ணில் கலந்து விடுங்கள்.
இயற்கை கொடுப்பதை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi