புதிதாக வாங்கப்படும் கறவை மாடுகளின் மூலம் பண்ணைக்குள் நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. நல்ல தரமான ஆரோக்கியமான கறவை மாடுகளை தேர்வு செய்து ,உரிய பண்ணை மேலாண்மையை கடைபிடிப்பதன் மூலம் நோய் தாக்குதல்களைத் தவிர்க்கலாம்.வயதினை கணக்கிட்டு கறவை மாடுகள் வாங்குவதும் அவசியமாகும்.
புதிதாக கறவை மாடு வாங்கும்போது அப்பகுதியின் தட்ப வெப்ப நிலை, பசுந்தீவனம் மற்றும் பால் விற்பனை வாய்ப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு வாங்க வேண்டும்.தமது பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் அல்லது வேளாண் அறிவியல் நிலைய ஆலோசனை பெற்ற பின்னர் எந்த இனத்தை வாங்கலாம் என்று முடிவு செய்யலாம்.
காசநோய்,ஜோன்ஸ் நோய்,கன்று வீச்சு நோய் போன்ற நோய் கண்டறியும் சோதனை செய்யப்படும்,அரசு மற்றும் தனியார் பண்ணைகளில் மாடு வாங்குவது நன்று.
மேற்கூறிய முறையில் மாடு வாங்க இயலாதவர்கள் கிராம புறங்களில் விற்பவர் வீடுகளுக்கே நேரடியாக சென்று வாங்குவது சிறப்பு. சந்தை மற்றும் திருவிழாக்களில் மாடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
மாடு வாங்கும்போது கணிக்க வேண்டியவை
கண்கள்: பசுவின் கண்கள் பளபளப்பாகவும் ,தெளிவாகவும்,நீர் வடியாமலும், மருக்கள் இல்லாமலும் பார்க்க வேண்டும்.
மூக்கு:மூக்கின் இடையே உள்ள கறுப்புப் பகுதி ஈரமாகவும் ,குளிர்ந்து,சுவாசம் சீராகவும், இருமல்,மூச்சு திணறல் இல்லாமலும் பார்த்து வாங்க வேண்டும்.
தோல்:மிருதுவாகவும், மினுமினுப்பாகவும்,உரோமம் சீராகவும்,சிக்கு இல்லாமலும்,உன்னி,பேன் ஆகிய ஒட்டுண்ணிகள் இல்லாமலும் பார்த்து வாங்க வேண்டும்.
உடல் எடை:நாம் வாங்கும் பசுவினத்திற்க்கேற்ற உடல் எடை உள்ளதா?என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இல்லாத நோஞ்சான் மாட்டினை தவிர்க்க வேண்டும்.
நடத்தை: பசு புதியவர்களை கண்டால் வெட்கப்படும்,அன்னியர்களை பார்த்து அச்சப்படும்.இப்படி இல்லாமல் சுற்று புறத்திற்கு ஏற்ற கவனம் இல்லாத பசுவை வாங்க கூடாது.
நடத்தல்: பசு நடக்கும்போது நொண்டுதல் ,சுண்டு வாதம் போன்ற அறிகுறிகள் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.பசு அமர்ந்து எழும்போது,நடக்கும் பொழுதும் எவ்வித சிரமும் இல்லாமல் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
பசுவின் மடி :மிருதுவாகவும்,காயம்,மரு இல்லாமல் இருப்பது நன்று.பசுவின் மடி உடல் அளவிற்கு ஏற்ப இருக்க வேண்டும்.பசு நடக்கும்போது இருபுறமும் சாய்ந்தடக்கூடாது.மடியில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் பால் தாரை நெரித்தும் புடைத்து இருப்பது நன்று.
பசுவின் உடல் வாகு: இது மாட்டின் நலத்தை காண்பிக்கக்கூடிய ஒரு அறிகுறி.நோஞ்சான் பசுவாகவும் இருக்க கூடாது ,கொழு கொழு பசுவாகவும் இருக்க க்கூடாது.
வயது:பசுவின் பல்லை பார்த்து வயதினை அறிந்து கொள்ள வேண்டும். வயதான பசுக்களைத் தவிர்த்து இளம் பசுக்களை வாங்குவதே சிறப்பு.
பசுவைப் பற்றிய இதர தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்: எத்தனை கன்று ஈன்றுள்ளது,தடுப்பூசி போட்ட விவரங்கள், ஏதேனும் நோய் தாக்கம், ஈனியல் பிரச்சினைகள் குறித்து விற்கும் நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi