அநேக மரங்கள் விதைகள் மூலமும் சில மரங்கள் போத்துக்ள நட்டும் இன்னும் சில மரங்கள் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மரககன்றுகளை நன்கு தயார் செய்யப்பட்ட ( 1 x 1 x 1 மீ) குழிகளில் மேல் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு உரம் கலந்து நிரப்பி தண்ணீர் விட்டடு பின்பு மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் வளரும் தன்மையைப்பொருத்து தக்க இடைவெளி விட்டு நட வேண்டும். மரங்கள் வளரும் போது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பக்க கிளைகள் இல்லாமல் ஒரே அடி மரத்துடன் இருக்குமாறு வளர்க்க வேண்டும்.
*மரங்களின் வகைகள்*
அலங்கார மரங்களை மலர் மரங்கள் , நிழல் மரங்கள் , இலை அழகு மரங்கள் என 3 பிரிவுகளாகப்பிரிக்கலாம்.
*மலர் மரங்கள்*
பேய் மரம்
இனிய மணமுடைய வெண்மை நிற மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும் காய்கள் 30 -50 செ.மீ நீளம் கொத்தாகத் தொங்கும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
*மந்தாரை*
இலைகள் ஒட்டகத்தின் கால் தடத்தைப் போன்ற வடிவில் இருக்கும் மலர்கள் இளஞ்சிவப்பு , வெள்ளை , வெள்ளை மலர்களில் சிவப்பு கோடுகள் , மஞ்சள் ஆகிய நிறங்களில் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
*பத்திரி*
தொங்கும் கிழைகளில் பளபளக்கும் இலைகளைக் கொண்ட மரம் . வெண்மை நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் தோன்றும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொத்துக் கொத்தாக பூக்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பொரச மரம் (காட்டுத் தீ)
இலைகள் முழுவதும் உதிர்ந்த பிறகு பூக்கள் தோன்றும். ஆரஞ்சு – சிவப்பு நிறத்தில் காணப்படும். காய்கள் ஒரே விதையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பாட்டில் பிரஷ் மரம்
இம்மரத்தின் மலர்கள் பாட்டில்கள் கழுவுவதற்கு உபயோகப்படுத்தும் பிரஷ் போன்று இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் பூக்கும் பூக்கள் சிவப்பு சிறத்தில் இருக்கும். பதியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
சரக்கொன்றை
சித்திரைக்கன்னி என்று மற்றொரு பெயரும் உண்டு. பிப்ரவரி – மே மாதங்களில் இடைவெளி இல்லாமல் ஒரே மஞ்சள் நிற பூக்கள் சரஞ்சரமாக தொங்கும் இம்மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
*கல்யாண முருங்கை*
மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு சிவப்பு மலர்க்கொத்துகளை தாங்கி நிற்கும் . பெரிய போத்துகளை நடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
ஜெகரான்டா
அழகான சிறிய இலைகளைக் கொண்ட இம்மரம் இலைகளை உதிர்த்தவுடன் மார்ச் – மே மாதங்களில் நீண்ட நீல நிற மலர் கொத்துகளைத் தாங்கி நிற்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
*நிழல் மரங்கள்*
(உம்) குன்றுமணி மரம், வாகை, வேம்பு, இலுப்பை, டிவிடிவி, ஈட்டி, தூங்கு மூஞ்சி, நாவல் , ஆலமரம், அரச மரம், புங்க மரம் , மகாகனி, புளிய மரம், தேக்கு, மருத மரம.
*இலை அழகு மரங்கள்*
(உம்) கிறிஸ்துமஸ் மரம், தூஜா, பெரனி மரம், புளுமேரியா, அழகு ரப்பர், கறிப்பலா, சவுக்கு மரம், தைல மரம், சில்வர் ஓக், நெட்டி லிங்கம் , பாதாம் மரம்.
அலங்கார குத்து செடிகள்
குத்து செடிகள் மரங்களைவிட சிறியதாக இருக்கும். அவற்றை தனியாக நடுவதை விட கூட்டமாக நடுவதே நல்லது. குத்து செடிகளிலும் மலர் அழகுச் செடிகள் மற்றும் இலை அழகுச் செடிகள் உள்ளன. அலங்கார குத்து செடிகளை வேலியாக அல்லது தடுப்பு சுவராகப் பயன்படுத்தலாம்.
*இலை அழகு குத்துச் செடிகள்*
(உம்) அகாலிபா, குரோட்டன்ஸ் , டுராண்டா, இராண்திமம், கிராப்டோபில்லம், காட்டாமணக்கு, லட்சக்கோட்டை போன்றவையாகும்.
*மலர் அழகுச் செடிகள்*
பார்லேரியா, பாகினியா, காகிதப்பூ, சிசால்பினியா, சேஸ்ட்ராம், கேசியா, டோம்பியா, யுபோர்பியா, ஹேமிலியா, செம்பருத்தி , மல்லிகை , முல்லை, ஜாதஜ , லண்டார்ணா, மருதாணி, முசாண்டா, அரளி, பவள மல்லி, பெண்டாஸ், பிளம்பாபோ, டேக்கோமா போன்றவைகள் ஆகும்.
*குத்துச் செடிகள் நடும்முறை*
குத்துச் செடிகள் தரையில் நடுவதற்கு முன் நிலத்தில் குழிகள் எடுக்க வேண்டும் குழிகளின் அளவு 1 ½ x 1 ½ x 1 ½ அடி நீளம் , அகலம் , ஆழம் ஆகும். குழிகளில் மக்கிய தொழு உரம் , செம்மண் , மணல் மற்றும் மேல் மண் ஆகியவற்றை சமமான அளவுகளில் இட வேண்டும். பின் மழைக்காலங்களில் , பாலிதீன் பைகளில் நன்கு வளர்ந்த அலங்கார குத்து செடிகளை பராமரிக்கலாம். செடிகள் துளிர் விட்டு நன்கு வளரும் போது பூச்சி , நோய்கள் ஏதாவது தென்பட்டால் அவற்றை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். செடிகள் ஓரளவு வளர்ந்த பிறகு செடிகளைச் சுற்றி உரம் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
அலங்கார வேலிச் செடிகள்
வேலிச் செடிகள் நடுவதற்கு 60 செ.மீ அகலம் 90 செ.மீ ஆழமுள்ள நீளமான குழி வெட்ட வேண்டும். பின்னர் குழியில் மக்கிய மாட்டு எரு அல்லது மக்கிய இலைகளுடன் மண்ணையும் கலந்து நிரப்ப வேண்டும். மழைக்காலத்தில் விதைகளை அல்லது போத்துகளை 2 அல்லது 3 வரிசைகளில் நட்டு அடாத்தியான வேலி அமைக்கலாம். விதைகள் முளைக்காமலோ அல்லது போத்துகள் துளிர்க்காமலோ இடைவெளி ஏற்பட்டால் உடனே அதை நிரப்ப தினக் கவனம் செலுத்த வேண்டும். நட்ட 6 மாத காலம் வரை வாரம் ஒரு முறையும் பிறகு தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. வேலிச் செடிகளை சதுரமான வடிவில் அமையுமாறு வெட்டி விட வேண்டும். மேல் பாகம் அடிப்பாகத்தை விட அகலமாக இருக்க கூடாது. வேலிச் செடிகளை வேண்டிய உயரம் வரை வளர விட்டு பின்பு வெட்டி விடுவதைக் காட்டிலும் முதலில் 30 செ.மீ உயரத்தில் வெட்டி விட வேண்டும். சில காலம் வளர விட்டு இரண்டாவது தடவை 45 செ.மீ உயரத்தில் வெட்டி விட வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக உயரத்தை கூட்டி வேண்டிய உயரம் வரை கொண்டு வந்தால் வேலி அடர்த்தியாக இருக்கும்.
(உம்) அகாலிபா, காகிதப்பூ, கிளிரோடென்ரான், டுரான்டா, குப்ரசஸ், செம்பருத்தி, ஹேமிலியா, மெனியா, சவுக்கு, அரேலியா, மருதாணி போன்றவைகள் ஆகும்.
*அலங்காரக் கொடிகள்*
*வளர்க்கும் முறை*
குழிவெட்டி (1 x 1 x 1மீ) குழியில் மண்ணுடன் சம அளவு மக்கிய எரு கலந்து நிரப்பி குளிர தண்ணீர் விட வேண்டும். கொடிகள் பெரும்பாலும் பதியங்கள் , தண்டுகள் அல்லது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினை நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். கொடி படர்ந்து வளர்வதற்கான பற்றுக் கோல் மற்றும் இதர சூழ்நிலைகளை செடி நட்டவுடனேயே அமைத்து விட வேண்டும். வளர்ந்து வரும் கொடிகளை அவ்வப்போது நீக்கி வந்தால் கொடி கவர்ச்சியுடன் வளரும்.
*அலங்காரக் கொடிகளின் வகைகள்*
அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி
வீட்டினுள் வளர்க்க ஏற்ற இடங்களும் அழகு செடிகளும்
பொதுவாகவே வீட்டைச்சுற்றி அலங்கார செடிகள் மற்றும் இயற்கைப் பொருட்களான கற்கள், நீர்ச் செடிகள் முதலியவற்றை உபயோகித்து அழகுபடுத்துவதன் மூலம் வீட்டின் அமைப்புக்கு ஒரு இயற்கையோடு இணைந்த சூழலை ஏற்படுத்த முடியும். இது போன்றே வீட்டில் உட்பகுதியிலும் பலதரப்பட்ட செடிகளை வளர்ப்பதன் மூலம் வீட்டின் உட்பகுதியை நன்கு அழகுறச் செய்யலாம். இவை இயற்கையோடு இணைந்த சுற்றுப்புற சூழலையும், மன அமைதி மற்றும் புத்துணர்வை நமக்கு தருகிறது.
Comments
Post a Comment
Smart vivasayi