செழிக்க வைக்கும் சீமை வெள்ளரி (Gherkin) சாகுபடி
சீமை வெள்ளரி, மருந்து வெள்ளரி, முள் வெள்ளரி மற்றும் மேற்கு இந்திய வெள்ளரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த வெள்ளரியின் அறிவியல் பெயர் குக்கூமிஸ் சாடிவஸ் வர். அங்காரியா , குக்கூர்பிடேசி குடும்பத்தைச் சார்ந்தது. கடந்த 10 வருடங்களில் தமிழகத்தின் முக்கிய பணப் பயிராக இந்த சீமை வெள்ளரி விவசாயிகளின் மத்தியில் மாறியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 9,500 ஏக்கர் பரப்பளவில் திண்டுக்கல், திருச்சி , தஞ்சாவூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 39,500 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்த வேளாண்மை (Contract farming) அடிப்படையில் இந்த சீமை வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
சாகுபடி தொழில்நுட்ப முறைகள்
பருவம்: மிதமான வெப்பம் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். தமிழகத்தில் டிசம்பர் – ஜனவரி மற்றும் ஜூன்-ஜூலை மாதத்தில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் நல்ல மண்வளத்துடன் கூடிய போதிய அளவு நீர் பாசன வசதி கொண்டிருந்தால் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம்.
மண்: பொதுவாக சீமை வெள்ளரியானது அனைத்து விதமான மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. கார அமிலத்தன்மை 6.0 – 6.8 வரை கொண்ட மணல் கலந்த களிமண் உகந்ததாகும்.
விதையளவு: ஒரு ஏக்கருக்கு 800 கிராம் விதை போதுமானது ஆகும்.
விதை நேர்த்தி: விதைகளை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது கார்பென்டாசிம் 2 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
விதைப்பு மற்றும் பயிர் இடைவெளி: 120 சென்டி மீட்டர் அகலமுள்ள பார் சால் அமைத்து, 30 சென்டி மீட்டர் இடைவெளியில் பாத்தியின் பக்கவாட்டில் இருபுறமும் இரண்டு விதைகளை நடவு செய்ய வேண்டும்.
உர மேலாண்மை: கடைசி உழவின்போது 25 டன்/எக்டர் மக்கிய தொழு உரம் இடவேண்டும். 150 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து மற்றும் 100 கிலோ சாம்பல்சத்து ஆகியவற்றை மூன்று பகுதிகளாக பிரித்து அடி உரம், மூன்றாவது வாரம் மற்றும் ஐந்தாவது வாரம் என இடவேண்டும். அமோனியம் நைட்ரேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் இவற்றை வாரம் ஒரு முறை 3 கிராம்/லிட்டர் என்ற அளவில் இலைவழி ஊட்டமாக கொடுக்கலாம்.
நீர் மேலாண்மை: நீர் மேலாண்மை மற்றும் உர மேலாண்மை ஆகியவை மகசூலை தீர்மானிக்கக் கூடிய மிக முக்கிய காரணிகளாக சீமை வெள்ளரியில் இருக்கின்றன. 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சுதல் அவசியம்.
களை மேலாண்மை: நடவு செய்த 10 -வது நாள் மற்றும் 30 -வது நாட்களில் களை எடுத்து மண் அணைத்தல் வேண்டும்.
பந்தல் அமைத்தல்: நடவு செய்த தேதியிலிருந்து 25-வது நாளில் பற்று கம்பிகள் உருவாகின்றன. 6 அடிக்கு ஒரு சவுக்கு அல்லது மூங்கில் அல்லது வேறு ஏதேனும் உறுதியான குச்சிகளை நடவேண்டும். இந்த குச்சிகளில் கிடைமட்டமாக சணல் கயிறு அல்லது கம்பிகளை கொண்டு கட்ட வேண்டும். பின்பு சிறிய சணல் கயிறு கொண்டு செடியின் அடிப்பாகத்தில் கட்டி கொடி படர்வதற்கு ஏற்றவாறு மேலே கொண்டு வர வேண்டும். இதன் மூலம் எளிதாக அறுவடை செய்யலாம் மகசூல் இழப்பு தவிர்க்கப்படும்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:
வெள்ளை ஈ, அசுவனி மற்றும் இலைப்பேன் ஆகியவற்றை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 1.5 மில்லி / லிட்டர் அல்லது மாலத்தியான் 1.5 மில்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பொறி ஏக்கருக்கு 10 – 12 வைக்க வேண்டும். அசுவினியை கட்டுப்படுத்த நீல நிற ஒட்டும் அட்டைகளை ஏக்கருக்கு 10 – 12 வைக்க வேண்டும். பழ ஈக்களை கட்டுப்படுத்த பழ ஈ பொறிகளை ஏக்கருக்கு 8 -10 வைக்க வேண்டும். சாம்பல் நோயினை கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.05 சதவிகிதம் (0.5 கிராம் / லிட்டர்) தெளிக்கவேண்டும்
அறுவடை
நடவு செய்த தேதியிலிருந்து 30 – 35 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யலாம். காய்களின் அளவு பொறுத்து முதல் தரம் (3 – 4 கிராம்) 30 மில்லி மீட்டர், இரண்டாம் தரம் (30+ மில்லி மீட்டர்), மூன்றாம் தரம் (100+ மில்லி மீட்டர் ) என்று தரம் பிரிக்கப்படும். தினசரி அறுவடை செய்தல் வேண்டும். 30 முதல் 45 நாள் வரை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட காய்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தினமும் கொள்முதல் செய்து கொள்கின்றன. பின்பு இந்நிறுவனங்கள் இந்த காய்களை முறையாக பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
பெரும்பாலும் இவை ஊறுகாய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நல்ல நீர்ப்பாசன வசதியுடன் கூடிய மண்வளம் கொண்டிருந்தால் 12 – 15 மெட்ரிக் டன் / ஹெக்டர் பெறலாம் . சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்வதன் மூலம் மேலும் 30-40 சதவிகிதம் அதிக மகசூல் பெற முடியும்,
Comments
Post a Comment
Smart vivasayi